மிக கனமழைக்கான எச்சரிக்கை அறிவுரைகளை திரும்ப பெற்ற தமிழக அரசு

186

மிக கனமழைக்கான எச்சரிக்கை அறிவுரைகளை தமிழக அரசு திரும்ப பெற்றுள்ளது. வானிலை மைய அறிக்கையை தொடர்ந்து, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதும், மாநிலம் முழுவதும் கனமழை பெய்தது. அதைதொடர்ந்து உருவான காற்றழுத்த தாழ்வு நிலையால், மாநிலம் முழுவதும் மழை வெளுத்து வாங்கியது. கனமழையால், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்நிலையில், வங்கக் கடலில் மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ள நிலையில், தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த எச்சரிக்கையின் அடிப்படையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகங்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் வானிலை மையம் நேற்று பிற்பகல் வெளியிட்ட அறிவிப்பில், தமிழகத்தில் மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை என்று தெரிவித்தது. இதையடுத்து, தமிழக அரசு, மிக கனமழைக்கான எச்சரிக்கை அறிவுரைகளை நேற்றிரவு திரும்ப பெற்றுள்ளது. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையால் வழங்கப்பட்ட மிக கனமழை எச்சரிக்கைக்கான அறிவுரைகள் வாபஸ் பெறப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.