எஸ்.பி.பி என்னும் வானம்பாடி

504
Advertisement

1946ஆம் ஆண்டு ஜூன் மாதம் 4ஆம் தேதி நெல்லூரில் பிறந்தவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். எஸ்.பி.பியின் தந்தை சம்பா மூர்த்தி நாடகங்களில் நடித்து வந்தார். கல்லூரியில் பொறியியல் படிப்பை உடல்நலக்குறைவு காரணமாக பாதியிலேயே கைவிட்ட எஸ்.பி.பி ஒரு இசைப்போட்டியில் பங்கேற்று தனது இசை பயணத்தை துவங்கினார்.

1966ஆம் ஆண்டு தெலுங்கு படத்தின் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்த எஸ்.பி.பி பின்னர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி என முக்கிய இந்திய மொழிகளில் தவிர்க்க முடியாத கலை ஆளுமையாக தடம் பதித்தார். காதல் ரோஜாவே, நிலவே வா, இளைய நிலா பொழிகிறதே, நலம் வாழ, உன்னை பார்த்த போன்ற பல காலத்தால் அழியாத பாடல்களை தமிழ் இசையுலகிற்கு பரிசளித்தவர் எஸ்.பி.பி. பாடகராக மட்டும் இல்லாமல் நடிகராக, இயக்குநராக, டப்பிங் கலைஞராக என, எஸ்.பி.பி திரையுலகில் எடுத்த அனைத்து அவதாரங்களிலும் தனி முத்திரையை பதித்தார்.

சிறந்த பின்னணி பாடகருக்கான தேசிய விருதை ஆறு முறை பெற்றுள்ள எஸ்.பி.பி 40,000 பாடல்களுக்கு மேல் பாடியுள்ள பாடகர் என்ற அடிப்படையில் கின்னஸ் சாதனையும் படைத்துள்ளார். பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷண் போன்ற மதிப்புமிக்க விருதுகளை இந்திய அரசிடம் இருந்து பெற்ற பெருமை எஸ்.பி.பியை சாரும். இந்திய இசையுலகில் இசை ஸ்வரங்களை அள்ளி வீசி கொண்டிருந்த எஸ்.பி.பி, நிரப்ப முடியாத வெற்றிடத்தை ஏற்படுத்தி விட்டு 2020ஆம் ஆண்டு  செப்டெம்பர் 25ஆம் தேதி மறைந்து இசைப்பிரியர்களை மீளா சோகத்தில் ஆழ்த்தினார். இன்று அவரின் பிறந்தநாளன்று அவரின் சிறந்த பாடல்களை நினைவுகூரும் ரசிகர்கள் எஸ்.பி.பிக்கு நிகர் எஸ்.பி.பி தான் என சமூகவலைத்தளங்களில் நெகிழ்ச்சியாக பதிவிட்டு வருகின்றனர்.