Tuesday, December 10, 2024

‘வாரிசு’ படத்திற்கு வரிசை கட்டி நிற்கும் சிக்கல்கள்! அதிர்ச்சியில் ரசிகர்கள்

விஜயின் 66வது படமான வாரிசு பட படப்பிடிப்பு தொடங்கிய முதல் நாளில் இருந்தே சர்ச்சைகளும் சிக்கல்களும் சேர்ந்தே ஆரம்பித்தது என்றே சொல்லலாம்.

தயாரிப்பாளர் தில் ராஜு இதுவரை இல்லாத அளவிற்கு விஜயின் சம்பளத்தை 120 கோடியாக உயர்த்தி வழங்கியது தமிழக தயாரிப்பாளர்களிடம் அதிருப்தியை கொண்டு வந்தது.

இனி அந்த தொகையை குறைக்க முடியாது என்பதும், தெலுங்கு மொழி இயக்குனருடன் ஒப்பந்தமானது ஆகியவையே அதிருப்திக்கான இரு காரணங்கள்.

தெலுங்கு திரைப்பணியாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட போது, வாரிசு தமிழ்ப்படம் என்பதால் தடையில்லாமல் படப்பிடிப்பு தொடர்ந்தது.

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் இருமொழிபடமாக எடுக்கப்படும் வாரிசு படத்தை, அப்போது தமிழ் படம் என்று அடையாளப்படுத்தியதே இப்போது தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் பட ரிலீஸ் பற்றிய சிக்கலை கொண்டுவந்துள்ளது.

இது பத்தாதென அக்டோபர் மாதத்தில் அவ்வப்போது படப்பிடிப்பு தளத்தில் இருந்து லீக் ஆன வீடியோக்கள், விஜய் உட்பட படக்குழுவினரை வெகுவாக கோபமடைய செய்தது.

சிரஞ்சீவியின் ‘வால்டர் வீரய்யா’ மற்றும் பாலய்யாவின் ‘வீர சிம்ஹ ரெட்டி’ படமும் சங்கராந்தி அப்போது ரிலீசுக்கு வரும் நிலையில் பண்டிகையின் போது, அதிக தியேட்டர்களை எப்படி தமிழ்ப்படமான வாரிசுக்கு வழங்க முடியும் என்பதே தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கம் எழுப்பும் முக்கிய கேள்வியாக உள்ளது.

எனினும், பண்டிகை நாட்களில் தமிழ்நாட்டில் இதுவரை பல தெலுங்கு மொழிப்படங்கள் வெளியாகி உள்ளதெனவும், இவ்வாறான  செயல்பாடு பிற்காலத்தில் தெலுங்கு படங்கள் தமிழகத்தில் ரிலீஸ் ஆவதில் பிரச்சினை ஏற்படும் என தமிழக திரைப்பிரபலங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும், அனுமதியின்றி யானையை பயன்படுத்தியதால் 7 நாட்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு தேசிய விலங்குகள் நல வாரியம் உத்தரவிட்டுள்ளது. இந்த விளக்கம் திருப்தியளிக்காத பட்சத்தில் வாரிசு பட ரிலீசுக்கு சட்ட சிக்கலாக அமையும்.

இது மட்டுமில்லாமல், அஜித் குமாரின் துணிவு மற்றும் வாரிசு ஒரே நாளில் அல்லது அடுத்தடுத்த நாளில் வெளியாகும் நிலையில், வாரிசுக்கு சமமாக துணிவிற்கு திரையரங்குகள் கிடைப்பதை, துணிவு திரையரங்கு உரிமையை பெற்ற தயாரிப்பாளர் உதயநிதி உறுதி செய்துள்ளார்.

இப்படி வாரிசு படத்திற்கு வரிசை கட்டும் பிரச்சினைகள் விஜய் ரசிகர்களை ஒருபுறம் கவலையடைய செய்ய, இத்தனை சவால்களையும் சமாளித்து வாரிசு வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Latest news
Related news

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!