உக்ரைன் ராணுவ வீரர்கள் 380 பேர் கொல்லப்பட்டதாக ரஷ்யா தெரிவிப்பு

231

ரஷ்யா வசம் சென்ற நகரை மீட்க போராடிய உக்ரைன் ராணுவ வீரர்கள் 380 பேர் கொல்லப்பட்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது தாக்குதல்களை நடத்திவரும் ரஷ்யா மீது அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ளன. மேலும் போரால் உருக்குலைந்த உக்ரைனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், ஆயுதங்களை வழங்கி உதவி செய்கின்றன.

இந்த நிலையில் கார்கீவ் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 240க்கும் மேற்பட்ட உக்ரைன் வீரர்கள் கொல்லப்பட்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. குப்யான்ஸ்க், யாஹிட்னே நகரை மீட்க போராடும் நோக்கில், முன்னேறிய உக்ரைன் படைகள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியதில் 100க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்ததாக ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதேபோல் பெட்ரோபாவ்லிவ்கா மற்றும் கிராஸ்னி பகுதியில் நடைபெற்ற தாக்குதல்களில் 140 உக்ரைன் வீரர்கள் கொல்லப்பட்டனர். மேலும் உக்ரைன் படையின் 2 பீரங்கிகள்ம் 8 காலாட்படை வாகனங்கள் மற்றும் 4 கார்கள் அழிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.