ரிப்பன் மாளிகையின் அசைக்க முடியாத சக்திகள்

528
Advertisement

சென்னை மாநகராட்சியின் முக்கியமான வரிவருவாய்,சொத்துவரி மூலமாகவே கிடைக்கிறது.
கடந்த ஆட்சிக்காலத்தில் 5 நட்சத்திர விடுதிகள்,திருமண மண்டபங்களுக்கு சட்டவிரோதமாக சென்னை மாநகராட்சியின் தலைமை அலுவலகத்தில் பணியாற்றும் வருவாய் அலுவலர்கள் சலுகை காட்டியதில் பலகோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

அது குறித்த ஆதாரங்கள் வெளியானதை அடுத்து,சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப்சிங் பேடி 5 நட்சத்திர விடுதி நடத்தும் நிறுவனங்களிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு வரிச்சலுகை செய்து கொடுத்த நபர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.

ஆனால்,விசாரணையாவது.. ஒன்னாவது.. என்ற ரீதியில் மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதியில் இருக்கும் பெரிய கட்டிடங்களுக்கும்
ரிப்பன் மாளிகையில் பணியாற்றும் வருவாய் அலுவலர்களே அசஸ்மென்ட் செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அவர்களின் இந்த செயல் மண்டல அலுவலகங்களில் பணியாற்றும் வருவாய் அலுவலர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

பல நூறு கோடி ரூபாய் வருவாய் இழப்பை ஏற்படுத்திய அதே நபர்கள் மீண்டும் அசஸ்மென்ட் மேற்கொண்டு வரி நிர்ணயம் செய்கிறார்கள்.
ஆனால் முறைகேடு என புகார் எழுந்தால்,மண்டல அலுவலகங்களில் பணியாற்றும் எங்களை நோக்கி கைகாட்டி விடுகிறார்கள் என குமுறித் தீர்க்கிறார்கள்.

இந்த விவகாரம் தொடர்பாக நம்மோடு பேசிய அதிகாரி ஒருவர்..
கடந்த ஆட்சிக்காலத்தில் 5 நட்சத்திர விடுதிகளுக்கு தாராளமாக வரிசலுகை செய்து கொடுத்தது ரிப்பன் மாளிகையில் பணியாற்றி வரும் வருவாய் அலுவலர்களே.

கிட்டத்தட்ட 187 நட்சத்திர விடுதிகளின் கோப்புகளுக்கு அவர்கள் செய்து கொடுத்த வரிச்சலுகை மூலமாக மட்டும் 100 கோடி ரூபாய்க்கும் மேல் மாநகராட்சிக்கு இழப்பு ஏற்பட்டது.
ஆனால் அவர்கள் மீது இப்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில், சமீபத்தில் நடந்த ஆய்வுக்கூடத்தில் வரி வசூலில் முறையாக ஈடுபடாத உதவி வருவாய் அலுவலர்கள் மூன்று பேரை இடமாற்றம் செய்யும் படி மாநகராட்சி ஆணையர் கூறினார்.
ஆனால்,,மண்டல அலுவலகங்களில் பணியாற்றி வந்த 17 உதவி வருவாய் அலுவலர்களை இடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதில் நன்றாக பணியாற்றி வருவோரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

ஆனால்,5 ஆண்டுகளுக்கு மேலாக ரிப்பன் மாளிகையில் பணியாற்றி வரும் உதவி வருவாய் அலுவலர்கள் கிருபாகரன்,மகேஷ் ,நடராஜன்,மோகன் சாய்,வெங்கட சுப்பிரமணியன் மற்றும் பாலச்சந்தர் ஆகிய ஆறு பேர் கொண்ட குழு இடமாற்றம் செய்யப்படவில்லை.

நட்சத்திர ஹோட்டல்களுக்கு வரிச்சலுகை செய்து கொடுத்து இழப்பை ஏற்படுத்தியதும் இந்த 6 நபர்களே.
ஆனால் அவர்கள் மீது நடவடிக்கையும் இல்லை.
இடமாற்றமும் செய்யப்படவில்லை.
ஆட்சி மாற்றத்திற்கு பிறகு இந்த ஆறு பேர் கொண்ட குழு தலா 10 ஆயிரம் புதிய கட்டிடங்களுக்கு அசஸ்மென்ட் செய்துள்ளனர்.

மண்டலங்களில் பணியாற்றும் வருவாய் அலுவலர்கள் செய்ய வேண்டிய பணியை தலைமை அலுவலகத்தில் பணியாற்றுவதால்,சட்டத்திற்கு புறம்பாகவும்,ஆணையர் அனுமதி இல்லாமலும் கட்டிடங்களுக்கு அசஸ்மென்ட் செய்து வருவாயில் கொழுத்து வருகின்றனர்.

சென்னை மாநகராட்சியின் ரிப்பன் மாளிகையின் அசைக்கமுடியாத ஆறு பேர் தான் சார் நான் மேலே குறிப்பிட்டுள்ள நபர்கள் என்று ஆதங்கத்தோடு கூறி முடித்தார்.

பலநூறு கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்திய நபர்கள் மீது இப்போது வரை எந்த நடவடிக்கையும் இல்லை என்பது நிஜம்.

தன்னால் அசைக்க முடியாத ஆறு நபர்கள் ரிப்பான் மாளிகையில் பணியாற்றிவருகிறார்கள் என்பது
ஆணையர் ககன்தீப் சிங் பேடிக்கு தெரியுமா?