அவமானங்களை கடந்து அடையாளமாக மாறிய விஜய்! ரசிகர்கள் கொண்டாடும் 30 ஆண்டு திரைப்பயணம்

218
Advertisement

‘தளபதி’ ‘அண்ணா’ என லட்சக்கணக்கான ரசிகர்களால் கொண்டாடப்படும் உயரத்தை எட்டிப் பிடிக்க நடிகர் விஜய் கடந்து வந்த பாதையில் ஆதிக்கம் செலுத்தியது அவமானங்களும் தோல்விகளும் தான்.

தமிழ் சினிமாவிற்குள் விஜய் அடியெடுத்து வைக்கும் போது உச்ச நட்சத்திரமாக இருந்தவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். அடுத்து களத்தில் முக்கியமாக இருந்தவர்கள், கல்லூரி செல்லும் இளம்பெண்களின் கனவு நாயகனாக வலம் வந்த பிரசாந்த் மற்றும் பார்த்த உடன் handsome ஆக இருக்கிறார் என சொல்ல வைக்கும் அஜித்.

இந்நிலையில், ‘நாளைய தீர்ப்பு’ படத்தில் அறிமுகமான விஜய்க்கு விமர்சனங்களே வாரி கொட்டப்பட்டது. பிரபல பத்திரிக்கைகள் ‘இந்த மூஞ்சிய யாரு காசு கொடுத்து பாப்பா’ மற்றும் ‘என்ன மூஞ்சி இது எண்ணை மண்டி மாதிரி’ போன்ற வாசகங்களால் காட்டமாக விமர்சித்தன. தோற்றத்தை முதலீடாக வைத்து சாதிக்க வேண்டிய துறையில், அந்த மையப்புள்ளியே விமர்சன பொருளாக மாறிய நேரத்தில், விஜய் தாக்குபிடிப்பாரா என எண்ணியவர்களுக்கு அவர் கொடுத்த பதில் தான் 30 years of vijayism என இன்று ட்ரெண்ட் ஆகி கொண்டிருக்கும் தனது 30 ஆண்டு கால திரைப்பயணம்.

புலி இசை வெளியீட்டு விழாவில் “என்னோட ஆரம்ப காலத்தில் வந்த விமர்சனங்களெல்லாம் மறைக்க ஒண்ணும் இல்ல, உங்க எல்லாருக்கும் தெரிஞ்சது தான். அதெல்லாம் நான் பாத்து சோர்ந்து போயிருந்தா இன்னைக்கு உங்க முன்னாடி விஜய்யா எல்லாம் நின்னுருக்க முடியாது. நிறைய பேர் வெற்றிக்குபின்னாடி ஒரு ஆணோ / பெண்ணோ இருப்பாங்கன்னு சொல்லி கேள்விபட்ருக்கேன். ஆனா எனக்கு பின்னாடி அவமானங்கள் தான் இருந்திருக்கு” என அவர் கூறியது தான் அவர் கடந்து வந்த அழுத்தமான பாதையின் சுருக்கம்.

விமர்சனங்கள், எதிர்மறை கருத்துக்கள், சூழ்ச்சிகள் என அனைத்திற்கும் அவர் கொடுத்த பதிலடி விடாமுயற்சியும் கடின உழைப்பும் மட்டுமே. யதார்த்தமான நடிப்பு, அசாத்திய நடனம், ஸ்டண்ட் காட்சிகளில் மாஸ் காட்டுவது என பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அவரை ரசிக்க ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம் கொடுத்து 30 ஆண்டுகளில் 65 படங்களை தமிழ் சினிமாவிற்கு அளித்துள்ளார் விஜய்.

இன்றைய சூழலில் படங்களின் வெற்றி தோல்விகளை தாண்டி, விஜயை தங்கள் வீட்டில் ஒருவராக நினைக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றே சொல்லலாம். அத்தனை அவமானங்களையும் கடந்து அயராது உழைத்ததற்கு பரிசாகவே, விஜய்க்கு தற்போது தமிழ் சினிமாவின் அடையாளமாக பார்க்கப்படும் அங்கீகாரம் கிடைத்துள்ளது என்றால் மிகையாகாது.