மேலும் ஒரு லாக் அப் மரணம்

320

சென்னை கொடுங்கையூர் காவல் நிலையத்தில் குற்ற வழக்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட திருவள்ளூர் மாவட்டம் அலமாதி பகுதியைச் சேர்ந்த ராஜசேகருக்கு திடீரென உடல் நிலை பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து கொடுங்கையூர் காவல் நிலையத்தில் இருந்த போலீசார் ராஜசேகரை அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பின்னர் மேல்சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியிலேயே ராஜசேகர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள ராஜசேகர் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது.

விசாரணை கைதி ராஜசேகர் சந்தேகத்திற்கிடமாக மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் விசாரணையை சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதனிடையே லாக்கப் மரணம் தொடர்பாக கொடுங்கையூர் காவல் நிலைய ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் பொன்ராஜ், உதவி ஆய்வாளர் கன்னியப்பன் உட்பட 5 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக கூடுதல் காவல் ஆணையர் அன்பு தெரிவித்துள்ளார்.

சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்துவது காவல்துறையினரின் கடமை என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையே, விசாரணைக் கைதி மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக மாஜிஸ்ட்ரேட் லட்சுமி விசாரணை நடத்தினார்.

தனது மகனை அடித்து கொன்றுவிட்டு போலீசார் பொய் சொல்கிறார் என விசாரணை கைதியின் தாய் குற்றம்சாட்டினார்.

ராஜசேகருக்கு எந்தவிதமான நோயும் கிடையாது, கடந்த சில ஆண்டுகளாக எதற்கு மருத்துவமனைக்கு சென்றதில்லை என்ற நிலையில் அவருக்கு எப்படி ஃபிக்ஸ் வந்தது என கேள்வி எழுப்பினார்.

தனது மகன் இறப்பு தொடர்பாக கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.