ஐ.பி.எல். 2வது தகுதிச்சுற்று போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நேற்றிரவு நடைபெற்றது.
இதில் மும்பை இந்தியன்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தினர். இந்த போட்டியில் முதலில் ஆடிய குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில், 3 விக்கெட் இழப்புக்கு 233 ரன்கள் குவித்தது. இந்த போட்டியில் சிக்ஸர் மழை பொழிந்து சுப்மன் கில், நடப்பு சீசனில் 3வது சதத்தை பதிவு செய்தார். அதிரடியாக ஆடிய சுப்மன் கில் 10 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள் என 129 ரன்கள் குவித்தார். இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை அணி வீரர்கள், சீரான இடைவெளியில் விக்கெட்டுக்களை பறிகொடுத்தனர்.
அதிகபட்சமாக சூர்யகுமார் 61 ரன்களும், திலக் வர்மா 43 ரன்களும் சேர்த்தனர். சிறப்பாக பந்துவீசிய மோகித் சர்மா 5 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். இதனால், மும்பை அணி 18.2 ஓவர்களில் 171 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம் 62 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற குஜராத் அணி, இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. நாளை நடைபெறும் சாம்பியன் பட்டத்துக்கான இறுதிப்போட்டியில் சென்னை – குஜராத் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.