ரஷ்யா உக்ரைன் போர் சூழ் உலக அரசியலில் இந்தியாவின் இக்கட்டான நிலை

254
Advertisement

உலக நாடுகளின் போக்கை எந்த நாடு தீர்மானிக்க போகிறது என்பதை சுற்றி நிகழும் தீராத அரசியலை தீவிரப்படுத்தியுள்ளது உக்ரைன் போர்.

ரஷ்யா உக்ரைனை ஊடுருவி 100 நாட்களுக்கும் மேல் கடந்துள்ள நிலையில், உலக நாடுகள் எந்த பக்கம் நிற்பது என்பதை முடிவு செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

பல நாட்கள் போராடி, உக்ரைனின் முக்கிய நகரங்களை ரஷ்யா கைப்பற்றி உள்ளது. உக்ரைனில் இருந்து, நாள்தோறும் நெஞ்சை உருக்கும் காட்சிகளும் செய்திகளும் வெளியாகி சூழ்நிலையின் பதட்டத்தை உணரவைக்கின்றன.

உலகின் 30 சதவீத கோதுமை தேவையை சந்தித்து வந்த ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகள் போர் காரணமாக ஏற்றுமதியை நிறுத்தி இருப்பது பல நாடுகளின் பொருளாதார நிலையை பாதித்துள்ளதோடு உணவு பொருட்களின் விலை ஏறவும் காரணமாக அமைந்துள்ளது.

இது ஒரு புறம் இருக்க உக்ரைன் போரின் அரசியல் தாக்கம் பல நாடுகளிலும் எதிரொலித்து வருகிறது. ஒன்றாம் மற்றும் இரண்டாம் உலகப்போருக்கு பின் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உலகநாடுகளுக்கு இடையே ஆன அதிகார போட்டி தலைதூக்கியுள்ளது.

எப்போதும் நம்பர் ஒன்னாக தன்னை நிலைநாட்ட பாடுபடும் அமெரிக்கா போரில், தனது முழு ஆதரவையும் உக்ரைனுக்கு வழங்கி வருகிறது.

பிப்ரவரி 24ஆம் தேதி போர் துவங்கியதில் இருந்து, இதுவரை அமெரிக்கா பில்லியன் கணக்கில் நிதியுதவி, ராணுவ ஆயுத உதவி, மருத்துவ உதவி, மனிதாபிமான அடிப்படையிலான உதவி என அனைத்து விதமான உதவிகளையும் உக்ரைனுக்கு அளித்து வருகிறது.

மேலும், பல உதவிகளை தொடர்ந்து திட்டமிட்டு செய்து வந்தாலும், அவ்வப்போது நடக்கும் துப்பாக்கி சூடு சம்பவங்களும், நாடு முழுதும் இயல்பு நிலையை பாதிக்கும் வெள்ளங்களும் உக்ரைனிடம் இருந்து அமெரிக்காவை திசை திருப்பி வருகிறது.

எனினும், அமெரிக்காவின் பெரிய எதிரிகளாக கருதப்படும் சீனா மற்றும் ரஷ்யா தலைவர்களின் உடல்நிலை சரியில்லாமல் இருப்பது அமெரிக்காவிற்கு சாதகமாகவே பார்க்கப்படுகிறது.

இருவருமே மூளை தொடர்பான பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில், புடின் சிகிச்சை பெற்று வருவதாகவும், ஜின்பிங் அறுவை சிகிச்சை செய்து கொள்ள மறுப்பு தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

சீனா முதலில் இருந்தே ரஷ்யாவுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறது. ரஷ்யா, அமெரிக்கா என இரு பெரும் நாடுகளிடையே நட்புறவை வளர்க்க முயலும் இந்தியாவிற்கு ரஷ்யா உக்ரைன் நாடுகளில் நிலவும் போர்ச்சூழல் இக்கட்டான நிலைமையை ஏற்படுத்தி உள்ளது.

உக்ரைன் போர் விரைவில் முடிந்து, அதன் தாக்கத்தால் ஏற்பட்ட  உணவு தட்டுப்பாடு மற்றும் பொருளாதார நெருக்கடி சீராக வேண்டும் என கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான், இந்த போரில் நடுநிலை வகிப்பதாக கூறி வருகிறது.

இலங்கை உள்நாட்டு அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியில் உழன்று வருவதால் போரில் பெரிதாக கருத்து கூறவில்லை.

எனினும், இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் இலங்கை எப்போதும் சீனா, ரஷ்யாவுடன் ஆதரவு போக்கை கையாள்வார்கள் என்பதே அரசியல் வரலாறு.

வளர்ந்து வரும் நாடான இந்தியா,  ஏதேனும் ஒரு அதிகாரமிக்க நாட்டை பகைத்து கொள்ளாமல் இன்னொரு நாட்டுக்கு ஆதரவு தெரிவிக்க முடியாத சூழலில் சிக்கியுள்ளது.

போர் முடிவுக்கு வரும் பட்சத்தில், உலகில் அதிகாரமிக்க நாடாக தன்னை நிலைநிறுத்தி கொள்ள அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா மோதலில் ஈடுபட்டு வரும் நிலையில், அப்போது இந்தியா உலக அரசியலில் எந்த இடத்தில், யார் பக்கம் நிற்கும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.