சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை

241

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதிவாக வலுவிழக்கும் என்று தெரிவித்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று எச்சரித்துள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, காரைக்காலில் இருந்து 560 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னையில் இருந்து 570 கிலோமீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. இது மேற்கு- வடமேற்கு திசையில் புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகர்ந்து, நாளை அதிகாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதிவாக வலுவிழக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தற்போது தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு வடமேற்கு திசையில் தெற்கு ஆந்திரா, வடதமிழகம் – புதுச்சேரியை நோக்கி நரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் இன்று கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.