17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

453

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு தொடங்கிய வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரம் அடைந்துள்ளது. இந்நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில், இன்று மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் கனமழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, சேலம், நாமக்கல், தருமபுரி, ஈரோடு, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகம் மற்றும் வடக்கு இலங்கை கடற்கரையை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 50 கிமீ வேகத்தில் வீசும் என்பதால், மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், வரும் 10ஆம் தேதி வங்கக் கடலில் புதிய காற்றழுத்தம் உருவாகும் என்றும், அது மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறி, சென்னை – நெல்லூர் இடையே கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.