வருமான வரி வசூலில் புதிய வரலாற்று சாதனை படைப்பு

358
Advertisement

வருமான வரித் துறை வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் அதிக அளவில் வசூல் செய்திருப்பதாக மத்திய நேரடி வரிகள் வாரிய தலைவர் ஜே.பி.மொஹபத்ரா தெரிவித்துள்ளார். நடப்பு நிதியாண்டில் முன்கூட்டிய வரி செலுத்துதல் மூலம் வரி வருவாய் 41 சதவீதம் அதிகரிப்பால் நேரடி வரி வசூல் 48 சதவீதத்திற்கு மேல் உயர்ந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த ஆண்டின் நிகர வரி வசூலானது 2020-21ஐ விட 48.4 சதவீதம் அதிகம் ஆகும். 2019-20 வரி வசூலை விட 42.5 சதவீதம், 2018-19ஐ விட 35 சதவீதம் அதிகமாக இந்த ஆண்டின் வரி வசூல் உள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில், நிகர வரி வசூல் அதிகமாக உள்ளது.

இந்த ஆண்டின் மொத்த வரி வசூலைப் பொருத்தவரை இதுவரை ரூ.15.50 லட்சம் கோடியாக உள்ளது. இது 2020-21ல் உள்ளதைவிட 38.3 சதவீதம் அதிகம். 2019-20ஐ விட 36.6 சதவீதம், 2108-19ஐ விட 32.7 சதவீதம் அதிகம் ஆகும். இதுவரை ரூ.12.79 லட்சம் கோடிக்கு மேல் வசூலை தாண்டியதில்லை. இந்த ஆண்டு, ரூ.15 லட்சம் கோடி என்ற மொத்த வரி வசூலை தாண்டி உள்ளோம். இது வருமான வரித்துறை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகம் ஆகும்.