ஆலோசனை நடத்திய முதலமைச்சர்

370

ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள புதிய கல்விக்கொள்கை குழுவினருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ தமிழக அரசு தொடர்ந்து எதிர்த்து வருகிறது.

இதற்கு மாற்றாக தமிழ்நாட்டின் மரபுக்கேற்ப மாநில கல்விக் கொள்கையை உருவாக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குழு அமைத்துள்ளார்.

ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையிலான இந்த குழுவில் 13 பேர் இடம்பெற்றுள்ளனர்.

குழுவின் உறுப்பினர் செயலராக மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

தமிழ்நாட்டின் வரலாற்று மரபு, தற்போதைய நிலைமை, எதிர்கால குறிக்கோளுக்கு ஏற்ப மாநிலத்திற்கான தனித்துவமான மாநில கல்வி கொள்கையை வகுக்க அனைத்து தரப்பினரிடமும் கருத்துக்களை பெற வேண்டும் என்றும், தமிழ்நாட்டு இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு கல்விக் கொள்கையை வடிவமைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், கல்விக் கொள்கையை ஓராண்டுக்குள் தயார் செய்து அரசிடம்  சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில், சென்னை தலைமை செயலகத்தில் புதிய கல்வி கொள்கை குழுவினருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

இதில், மாணவர்கள், கல்வியாளர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் என பல்வேறு தரப்பினரிடம் பெறப்பட்ட கருத்துக்கள் உள்ளிட்டவைகள் குறித்து, புதிய கல்விக்கொள்கை குழுவினர், முதலமைச்சரிடம் விவரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.