உள்ள போனா உயிரோட வெளிய வர முடியாதா? மரண பயம் காட்டும் மர்ம கோட்டை

207
Advertisement

ராஜஸ்தான் மாநிலம் அரவாளி மலைப்பகுதியில் அல்வார் மாவட்டத்தில் அமைந்துள்ளது பாங்கர் கோட்டை. மலையடிவாரத்தில் உள்ள இந்த கோட்டையின் சில பகுதிகள் சிதிலமடைந்து காணப்படுகின்றன.

கோட்டையை சுற்றிலும் ஆறு, குளம், மரங்கள் என இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகள் அலங்கரித்தாலும், கோட்டையை சுற்றி சுழலும் திகிலூட்டும் கதைகள் காலங்காலமாக சுற்றுவட்டார பகுதி மக்களை பீதியில் உறைய வைத்து வருகின்றன.

சாது ஒருவர் தனது வீட்டின் மீது நிழல் படும் அளவிற்கு உயரமாக கட்டப்படும் எந்த வீடும் அழிய வேண்டும் என சாபம் விட்டதாகவும், அதனால் கோட்டை சுவர் நிழல் அவர் வீட்டின் மீது பட்டவுடன் சேதமடைந்ததாக பழங்கதை ஒன்று பரவலாக கூறப்படுகிறது. அதே போல, பாங்கர் கோட்டையின் இளவரசி மீது காதல் வயப்பட்டு அவரை அடையமுடியாத ஒரு மந்திரவாதியின் சாபமும் கோட்டையை விட்டு மக்கள் வெளியேற காரணமாக அமைந்ததாகவும் ஒரு கதை நிலவுகிறது.

1605ஆம் ஆண்டு வரை இந்த கோட்டையில் கிட்டத்தட்ட பதினான்காயிரம் மக்கள் வரை வாழ்ந்ததாகவும், 24 மணி நேரத்தில் அவற்றில் பாதி மக்கள்தொகையினர் வெளியேறி விட்டதாகவும் உள்ளூர் பேச்சாக உள்ளது. மேலும், சூரியன் மறைந்தது முதல் சூரிய உதயம் வரை கோட்டைக்குள் நுழைய தடை செய்யப்பட்டுள்ளதாக பலகையில் அறிவிப்பு எழுதப்பட்டுள்ளது.

இதற்கு ஒரு படி மேலே போய் இரவு கோட்டைக்குள் செல்பவர்கள் உயிருடன் திரும்புவதில்லை அல்லது காணாமல் போய்விடுவதாக உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர்.

அண்மையில் தனியார் செய்திக் குழுவினர் சிலர், இந்தக் கூற்றுகளின் உண்மைத்தன்மையை ஆராய்ச்சி செய்ய பாங்கர் கோட்டைக்கு,  இரவு நேரத்தில் சென்று தங்கியுள்ளனர். ஆனால், பதிவு செய்யும் அளவிற்கு வித்தியாசமாக எதுவும் நடக்கவில்லை என்பதே அவர்களின் இறுதி அறிக்கையாக இருந்தது.

குரங்குகள் நடமாட்டம் கோட்டையில் அதிகம் இருந்ததாக கூறும் அவர்கள், மக்கள் கோட்டையை விட்டு வெளியேற உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் குறைபாடே காரணமாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளனர். கோட்டையை பற்றிய மர்மம் இன்றும் தொடர்வதற்கு மக்களின் உளவியல் பாதிப்பே காரணம் என்றும் செய்தியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.