அதிமுக அலுவலக மோதல் : 400 பேர் மீது வழக்கு பதிவு

307

அதிமுக அலுவலகத்தில் சீலை அகற்றக்கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, அதிமுக அலுவலக மோதல் தொடர்பாக 400 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை அறிவித்துள்ளது.

அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற வேளையில் நேற்று ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இருதரப்பினரும் மோதிக்கொண்டனர்.

இதில் 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இந்த மோதல் சம்பவம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தரப்பிலும், ஓ.பன்னீர் செல்வம் தரப்பிலும், ராயப்பேட்டை காவல்நிலையத்தில் புகார்கள் அளிக்கப்பட்டன.

காவல்துறையினரும் இந்த மோதலில் தாக்கப்பட்டதால், காவல்துறை சார்பாகவும் புகார் அளிக்கப்பட்டது.

இந்த 3 புகார்களின் கீழ், 400 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது.

ஓபிஎஸ் தரப்பினர் 200 பேர் மீதும், இபிஎஸ் தரப்பினர் 200 பேர் மீதும் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே அதிமுக அலுவலகத்தில் சீலை அகற்றுமாறு எடப்பாடி பழனிசாமி தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நீதிபதி சதீஷ் குமார் முன்னிலையில், இ.பி.எஸ். தரப்பு வழக்கறிஞர் விஜய்நாராயணன் தாக்கல்செய்துள்ள மனுவில், அதிமுக அலுவலகத்திற்குள் ரவுடிகள் புகுந்ததால் மோதல் ஏற்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக-வின் அதிகாரபூர்வ நி்ர்வாகிகள் பணியாற்றும் வகையில் சீலை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.