தக்ஷின் தென் இந்திய மீடியா & எண்டர்டெயின்மெண்ட் உச்சிமாநாடு சமீபத்தில் நடந்து முடிந்தது.
இந்த உச்சிமாநாட்டின் நோக்கம், தென்னிந்திய சினிமா அதன் சாதனைகளைக் கொண்டாடுவதற்கு அதனுடன் தொடர்புடைய பங்குதாரர்களை ஒன்றிணைப்பது, சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்துகொள்வது மற்றும் கற்றுக்கொள்வது மற்றும் மொழி பேதமின்றி மேலும் முன்னேற்றத்திற்காக அதன் பிற சகாக்களுடன் இணைவது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதை சாத்தியப்படுத்தும் வகையில் சாதித்த பிரபலங்களின் முக்கியமானவர்களின் சிறப்பு உரைகள், குழு விவாதங்கள், அறிவுரை அமர்வுகள் மற்றும் பிரத்தியேக நிறைவு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதன் மூலம், இந்த உச்சிமாநாடு M&E (Media & Entertainment) துறையின் மறுமலர்ச்சிக்கான பாதையை வகுக்கும் எனும் நம்பிக்கையை உருவாக்கியது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டவர்களில் இயக்குநர் மணிரத்னம் இயக்குநர் ராஜமெளலி, காந்தாரா புகழ் ரிஷப் ஷெட்டி, ஃபஸில் ஜோசப் உள்ளிட்ட பலரது கருத்துக்கள் தென்னிந்திய சினிமா பற்றி பிற மொழியினரும், பிற நாட்டு சினிமா ஆர்வலர்களும் புரிந்து கொள்ளும் வகையில் மிகத் தெளிவாக முன்வைக்கப்பட்டனர்.
இந்த நிகழ்ச்சிக்கு குஷ்பூ மேம் அழைப்பை ஏற்று நான் வந்தேன். மேடையில் பேசத் தேவை இருக்காது. விருது வாங்கிக் கொண்டு சென்று விடலாம் என்று உறுதிப் படுத்திக் கொண்டு தான் வந்தேன். ஆனால், இப்போது பேசச் சொல்லிவிட்டார்கள்… நன்றி. மேடையில் பேசுவதற்கான முன் தயாரிப்புகள் இன்றி வந்து விட்டேன்.
அதனால் என் மனதில் இருப்பதை பேசுகிறேன். நான் எதிர்பார்த்திருக்கவில்லை, 40 வயதில் எனக்கு யூத் ஐகான் விருது வழங்கினர், (தனுஷ் இதைச் சொன்னபோது சிரிப்பொலியில் அரங்கம் அதிர்ந்தது). தானும் சிரித்துக் கொண்டு, அதற்காக மீண்டும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 30 வயதில் என்னைப் பார்த்த 50 , 60 வயதுக்காரர்கள், உனகென்ன இப்போது 30 வயது தான் ஆகிறது, யூ ஆர் சோ யங் என்கிறார்கள். அப்போது நான் நினைத்துக் கொண்டேன், எனக்கு 30 வயதாகி விட்டதே என்று… ஆனால்,
இவர்கள் நம்மைப் பார்த்து ஜஸ்ட் 30 வயதுதானே ஆகிறது என்கிறார்களே! என்று. இப்போது 40 வயதிலும் என்னைப் பார்த்தால் போதும் அவர்கள் சொல்கிறார்கள்,யூ ஆர் ஜஸ்ட் 40, யூ ஆர்சோ யாங்! என்று…
இப்போது நான் உணர்கிறேன், அடைய வேண்டிய இலக்குகள் இன்னும் நிறைய இருக்கிறது, ஓடிச் சாதிக்க வேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது, என்னைப் போன்ற தோற்றம் கொண்ட ஒருவன் இந்த சினிமா உலகில் இவ்வளவு தூரம் வர முடிந்தால் என் பெற்றோரின் பிரார்த்தனைகள் இன்றி அது சாத்தியப்படாது. இப்போது நான் இந்த இடத்தில் இருக்கிறேன் என்றால் அதற்கு நிர்ணயித்த இலக்குகளுடன் நான் கண்ட கனவுகளே காரணம். நான் இப்படித்தான் இருக்கிறேன்… இனி இப்படி ஆவேன் என்று தெளிவான இலக்கை நிர்ணயித்துக் கொண்டு நான் செயல்படுகிறேன்.