அதிமுக பொதுக்குழு வழக்கில் தனி நீதிதிபதியின் தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் தொடர்ந்த வழக்கில் கடந்த 17-ம் தேதி தனி நீதிபதி தீர்ப்பு வழங்கினார். அந்த தீர்ப்பில், ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது எனவும், ஜூன் 23ஆம் தேதிக்கு முந்தைய நிலையே நீடிக்க வேண்டும் எனவும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து தான் பொதுக்குழு, செயற்குழுவை கூட்ட வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக தேர்வு செய்த பொதுக்குழு செல்லாது என்றும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
தனி நீதிபதியின் இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் துரைசாமி, சுந்தர்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில், இன்று காலை 11 மணிக்கு விசாரணைக்கு வருகிறது. எடப்பாடி வழக்கு விசாரணையின்போது, தனது தரப்பு வாதத்தை கேட்காமல், எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என்று ஓ.பன்னீர்செல்வம் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.