2014-ம் ஆண்டு உட்கட்சி தேர்தலை நடத்திய அதிமுக, அதன் பிறகு 2019-ம் ஆண்டு உட்கட்சிப்பதவிகளுக்கான தேர்தலை நடத்தி இருக்கவேண்டும். ஆனால், நாடாளுமன்றத்தேர்தல், அதன் பிறகு கொரோனா பிரச்சனை என இரண்டு ஆண்டுகள் தள்ளிப்போய் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தான் அதிமுக தலைமை கட்சித்தேர்தலை நடத்திமுடித்தது.
17 சார்பு அணிகளை கொண்ட அண்ணாதிராவிட முன்னேற்றக்கழகம் இந்தியாவின் மாபெரும் அரசியல் கட்சிகளில் ஒன்று. சமீபத்தில் 75 மாவட்டங்கள், நகராட்சி, பேரூராட்சி, ஒன்றியம், 80 ஆயிரம் கிளைக்கழகங்கள் என அக்கட்சி நடத்தி முடித்த உட்கட்சி தேர்தலில் பல்லாயிரக்கணக்கான நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
உட்கட்சி தேர்தல் முடிவுகளை கடந்த மாதம் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்த அதிமுக, அதன் தொடர்ச்சியாக ஜூலை 23-ம் தேதி பொதுக்குழு கூட்டத்தை நடத்தவுள்ளது.
இந்த கூட்டத்தை மையப்படுத்தி எழுந்துள்ள சர்ச்சைகள் அதிமுகவிற்கு புதிது ஒன்றும் அல்ல. 2019-ல் நடந்த நாடாளுமன்றத்தேர்தலின் போதே அதிமுகவின் ஒற்றைத்தலைமையாக மாறுகிறாரா எடப்பாடி பழனிச்சாமி என பத்திரிகைகளும் ஊடகங்களும் தொடர்ச்சியாக பேசியும் எழுதியும் வந்த விஷயங்கள் தான்.
ஆனால், அப்போதெல்லாம் அப்படி ஒரு கோரிக்கையே அதிமுகவில் இல்லை எனக்கூறிவந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கடந்த வாரம் நடந்த அதிமுக மாவட்டசெயலாளர்கள் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்தபோது, ஒற்றைத்தலைமை கோரிக்கை எழுந்துள்ளது என போட்டுடைத்த தகவலே தமிழக அரசியலில் சூறாவளியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறிய விஷயம் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்தை ரொம்பவும் பயமுறுத்தி உள்ளது போல. அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிச்சாமி எந்த சலனமும் காட்டாமல் எப்போதும் போல தன்னுடைய வேலைகளை பார்த்துக்கொண்டிருக்கிறார். ஆனால், ஓபிஎஸ்-ன் ஆதரவாளர்கள் தென்மாவட்டங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக போஸ்டர்களை அச்சிட்டு ஒட்ட,
சேலம் உள்ளிட்ட கொங்கு மாவட்டங்களில் இபிஎஸ்-ன் ஆதாரவாளர்கள் போஸ்டர் ஒட்ட பிரச்சனையின் வீரியம் அதிகரிக்கத்தொடங்கியது.
அதனால், அதிமுக தொண்டர்கள் அமைதி காக்க வேண்டுமென ட்விட்டர் மூலமாக வேண்டுகோள் வைக்கவேண்டிய சூழலை உருவாக்கிவிட்டது.
அதோடு விட்டிருக்கலாம் ஓபிஎஸ்,ஆனால்,,
எல்லாம் நல்லாத்தான் போயிட்டு இருந்துச்சி..
நீங்க கேட்கற ஒற்றைத்தலைமை,ஏன் உருவாக்கிட்டு இருக்குன்னு
எனக்கே தெரியல..கனவா..நனவான்னு தெரியல என்று கூறியது தனக்கே தெரியாமல் தன்னை பலவீனமானவனாக ஓபிஎஸ் வெளிப்படுத்திக்கொண்டாரா என்ற எண்ணத்தையே ஏற்படுத்துகிறது.
பிரதமர் மோடி கூறிய காரணத்தினால் தான் துணை முதலமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டேன் என்று கூறிய ஓபிஎஸ்,
அமைச்சருக்கான இலாக்காக்களை சென்னை போட் கிளப் வீதியில் காருக்குள் அமர்ந்து பேரம் பேசி வாங்கியதையும், ஆளுநர் அலுவகத்தில் இருந்து 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் 21-ம் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்த பிறகே
தலைமை அலுவகத்திற்கு வந்ததையும் இல்லை என்று மறுக்க முடியுமா?
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக செயல்பட்டபோது தான் ஆதரவு கொடுத்ததாக கூறும் ஓபிஎஸ், அது சரியான தகவலா என்பதை யோசிக்க வேண்டும்.
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் முதலமைச்சரை மாற்றவேண்டுமென ஆளுநரை சந்தித்து கடிதம் அல்லவா கொடுத்தனர்.
ஆனால் 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சட்டப்பேரவையில் பெரும்பான்மை நிரூபிக்க,எடப்பாடி பழனிச்சாமி தீர்மானம் கொண்டுவந்து, வாக்கெடுப்பு நடந்த போது, அவரை எதிர்த்து வாக்களித்தார் என்பது வரலாற்று உண்மை அல்லவா!
அதற்கு பிறகும் கூட கிட்டத்தட்ட 3 மாத காலம், வீட்டிற்கு வருவோருக்கு எல்லாம் அண்ணாநகர் அக்ஷயா ஹோட்டலில் இருந்து உணவை வரவழைத்து 3 வேளை சாப்பாடு போட்டு தர்மயுத்தம் நடத்தியதை இல்லையென்று மறுக்க முடியுமா?
கட்சி உடைந்துவிடக்கூடாது என்பதால் எல்லாவற்றையும் பொறுமையாக எடுத்துக்கொண்டேன் என்று கூறும் ஓபிஎஸ்,
ஒற்றைத்தலைமை வேண்டும் என்ற கோரிக்கையை கண்டு ஏன் இவ்வளவு பதட்டப்படவேண்டும்?
தேனி மாவட்டத்தில், அவரது சொந்த தோட்டத்தில் கூட்டம் போட்டு,
அந்த கூட்டத்தில் எந்தவித நிபந்தனையும் இல்லாமல் திருமதி.சசிகலாவை ஏற்றுக்கொள்ளவேண்டும் என தீர்மானம் போடப்பட்டதை எதார்த்தமாக எடுத்துக்கொண்ட பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் மாதவரம் மூர்த்தி ஒற்றைத்தலைமை வேண்டுமென கேட்டதை ஏன் பூதாகரமான விஷயமாக கருதுகிறார் ?
அதே நேரம்,தனக்கு எதிராக சட்டப்பேரவையில் ஓபிஎஸ் வாக்களித்ததை எடப்பாடி பழனிசாமி மறந்தோ,மன்னித்தோ விட்டதாக தெரியவில்லை.
கடந்த மே மாதம் தமிழக முதமைச்சர் முக ஸ்டாலினை சந்தித்த,அதிமுக எம்.பி.ரவீந்திரநாத்
திமுக அரசின் சிறப்பான செயல்பாடுகளுக்கு வாழ்த்து தெரிவித்ததை அவ்வளவாக ரசிக்கவில்லை
சரியான சந்தர்ப்பத்திற்காக காத்திருந்த எடப்பாடி பழனிசாமி,
சில மாதங்களுக்கு முன்பே அவரை வீட்டில் சந்தித்த அதிமுகவின் நிர்வாகிகளிடம்,கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கள் இன்னும் 3 மாதத்தில் அவராகவே கட்சியை போய்விடுவார் என்று கூறியிருக்கிறார்.
அதன்,அடுத்த கட்டமாகவே மாதவரம் மூர்த்தி மூலமாக ஒற்றைத்தலைமை கோரிக்கையை வெளிப்படுத்தியிருக்கிறார்.
உண்மையில்,அதிமுகவில் போட்டி என்று ஒன்று உருவானால் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்களில்
90% பேரின் ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கே கிடைக்க வாய்ப்பிருக்கிறது.
ஆனால் பன்னீர்செல்வம் மீண்டும் இந்த பொதுச்செயலாளர் பதவி யாருக்காவது கொடுக்க வேண்டும் என்று சொன்னால் ஜெயலலிதாவுக்கு நாங்கள் கொடுத்த மிகுந்த மதிப்பு, மரியாதை காலாவதியாகிய சூழல் உருவாகும். அது அவருக்கு செய்யும் மிகப்பெரிய துரோகமாகத்தான் இருக்குமென நினைக்கிறேன் என்று கூறியிருக்கிறார்
துரோகம்..துரோகம்..துரோகம்..
உண்மையிலேயே இந்த வார்த்தைக்கு உயிர் இருந்தால் தூக்கு மாட்டி செத்துவிடும்.
யாரோ ஒரு ஆடிட்டர் சொன்னார் என்பதற்காக தர்மயுத்தம் என்ற நாடகத்தை நடத்தி அதிமுக என்ற கட்சியை உடைத்து, இரட்டை இலை சின்னத்தை முடக்கிய ஒபிஸ்க்கும்,,
முதலமைச்சர் பதவியில் அமரவைத்த சசிகலாவை யாரென்றே தெரியாதது போல அரசியல் செய்து வரும் இபிஎஸ்-க்கும் துரோகம் செய்வது புதிதா என்ன ?
2017-ல் அதிமுக இரண்டாக பிரிந்து பிளவு ஏற்பட்ட போது
இரு தரப்பின் சார்பிலும் லட்சக்கணக்கான பிராமணப் பாத்திரங்கள் இந்திய தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
அவை தேர்தல் ஆணையத்தால் சீண்டப்படாமல் குப்பைத்தொட்டிக்கு சென்றதை ஓபிஎஸ் இபிஎஸ் இருவருமே மறந்திருக்க மாட்டார்கள்..
அதனால் சுமூகமாக இந்த பிரச்னையை முடிக்க இருவருமே முயற்சிப்பார்கள் என்பதே எதார்த்தம்
அதிகாரத்தை அடைய செய்யும் அனைத்தையும் ராஜநீதி என்று தானே கூறுகிறது
ஓபிஎஸ்-இபிஎஸ் இருவருமே துரோகம் செய்யத் தகுதியானவர்களே..
ஆகையால்,,
அதிமுக என்ற கட்சிக்கு எது நல்லதோ அதற்கு ஏற்றவாறு
மீண்டுமொரு துரோகத்தை “ஜெயலலிதாவுக்கும்” செய்யலாம்..
அதில் எந்த தவறும் இல்லை