“செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்படும்” – புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம்

406
Advertisement

கலை, அறிவியல் கல்லூரிகளில் இறுதியாண்டுக்கு மட்டுமே செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்படும் என்று  புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

புதுச்சேரியில் கல்லூரி தேர்வுகள் தொடர்பாக தெளிவான நடைமுறை வெளியிடப்படாமல் இருந்தது. இதைத்தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் ஆன்லைனில் தேர்வு நடத்துமாறு பல்கலைக்கழகத்துக்கு கல்வியமைச்சர் நமச்சிவாயம் கடிதம் எழுதினார்.

இதையடுத்து கடந்த 19-ம் தேதி முதல் அனைத்து செமஸ்டர் தேர்வுகளும் ஆன்லைன் முறை மூலம் நடத்தப்படும் என்று பல்கலைக்கழகம் தெரிவித்திருந்தது. அதன்படி இறுதியாண்டு தேர்வுகள் பலதுறைகளில் தொடங்கியது.

இது தொடர்பாக, பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டாளர் லாசர், அனைத்துக்கல்லூரிகளுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில்,யூஜிசி வழிகாட்டுதல் படி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். 

இறுதி ஆண்டு மாணவ, மாணவிகளுக்கான செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்படும் என்றும்,  பட்டப்படிப்பில் முதலாமாண்டு, இரண்டாமாண்டு மற்றும் பட்டமேற்படிப்பில் முதலாண்டு செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்படுகின்றன என்று தெரிவித்தார்.  

அதேநேரத்தில் இம்மாணவர்கள் தேர்வுக்கட்டணம் செலுத்துதல், தேர்வுக்கு பதிவு செய்தல் உட்பட அனைத்து விஷயங்களையும் ஏற்கெனவே தரப்பட்டுள்ள அட்டவணைப்படி பின்பற்ற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.