கண்ணாடியை வச்சு மண்ணு தயாரிக்கலாமா?

402
Advertisement

அமெரிக்காவில் லூசியானா மாநிலத்தை சேர்ந்த பிரான்சிஸ்கா ட்ரவுட்மேன் தன்னை சுற்றி நாள்தோறும் வீணாகும் கண்ணாடியை மறுசுழற்சி செய்து சுற்றுசூழல் புரட்சி ஒன்றை செய்து வருகிறார்.

கல்லூரியில் படிக்கும் பிரான்சிஸ்கா தன்னுடைய சீனியர் மேக்ஸ் உடன் சேர்ந்து லூசியானாவில் Glass Half Full என்ற பெயரில் முதல் கண்ணாடி மறுசுழற்சி மையத்தை நிறுவியுள்ளனர்.

கடற்கரை மண் குறைந்து கடல்நீர் உள்ளே புகுவதால் அமெரிக்காவில் ஒவ்வொரு நூறு நிமிடங்களுக்கும் கடலின் நீர்மட்டம் உயரும் அபாயம் ஏற்படுகிறது. இதனால் கடல் வளம் பாதிக்கப்படுவதோடு பருவநிலை மாற்றமும் தீவிரம் அடைவதற்கு காரணமாக அமைகிறது.

இந்த சூழ்நிலைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால்  2100ஆம் ஆண்டுக்குள் கடல்நீரின் மட்டம் 80cm  வரை உயர்ந்து உலகின் 13% கடற்கரைகள் கடலுக்குள் முழுகிவிடும் என ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.

கண்ணாடியை மறுசுழற்சி செய்வது இந்த பாதிப்பை வெகுவாக குறைக்க உதவும் என கூறும் பிரான்சிஸ்கா, இனிமேல் வேடிக்கை பார்த்து கொண்டிருக்காமல் சுற்றுசூழலை காப்பாற்ற அனைவரும் ஆக்கபூர்வமான பணிகளில் ஈடுபட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மேலும், கண்ணாடியில் இருந்து மறுசுழற்சி செய்யப்படும் போது கிடைக்கும் மண்ணை கட்டுமான பணிகள் தவிர மண்ணரிப்பு ஏற்பட்டுள்ள கடற்கரைகளை பாதுகாக்கவும் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பகிர்ந்துள்ளார். இயற்கையாக உற்பத்தியாகும் மண்ணின் அளவை விட நாம் அதிக அளவு மண்ணை உபயோகித்து வருவதால் இது போன்ற புதுமையான முயற்சிகள் வரவேற்கத்தக்கது என சுற்றுசூழல் ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.