வார் ரூம் வரலாறு யாருடன் போர்?

274
Advertisement

கொரானா அலைஅலையாய் வந்து மனிதர்களை மட்டுமன்றி
விலங்குகளையும் தாக்கிவருகிறது கோவிட் 19. இந்த வைரஸ்
தொற்றை அழிக்கும் மருந்து இதுவரைக் கண்டறியப்படவில்லை
எனினும், அதனைத் தடுப்பதற்கான ஊசிகள் பல பயன்பாட்டுக்கு
வந்துவிட்டன.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஒவ்வொரு நாடும்
பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா
பற்றிய விழிப்புணர்வு வந்துவிட்டாலும், வந்தபின் அவர்களுக்கான
சிகிச்சைகளைப் பெற அரசும் தனியார் நிறுவனங்களும்
தன்னார்வலர்களும் முயன்றுவருகின்றனர்.

இதன் ஒருபகுதியாக வார் ரூம் (போர் அறை) என்னும் கட்டுப்பாட்டு
அறை திறக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள்
இந்த வார் ரூமில் உள்ளவர்களைத் தொடர்புகொண்டு பரிசோதனைமுதல்,
ஆக்ஸிஜன் படுக்கை வசதிவரையிலான விவரங்களைப் பெறலாம்.

யாரை, எங்கே தொடர்புகொள்ள வேண்டும் என்கிற விவரமும்
இந்த வார் ரூமிலிருந்து பெற்றுக்கொள்ளலாம்.

தமிழகத்தில் தற்போது தொடங்கப்பட்டுள்ள இந்த வார் ரூமில்
ஆறு ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட குழு அரசு மற்றும் தனியார்
மருத்துவமனைகளுள் உள்ள ஆக்ஸிஜன் மற்றும் படுக்கை இருப்பைக்
கண்காணிக்கும்.

கொரோனா கட்டுப்பாட்டுக் கட்டளை மையமாக விளங்கும்
இதைத் தமிழக அரசு தொடங்கியுள்ளது- சென்னை, தேனாம்
பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் தேசிய நலவாழ்வுக் குழும
அலுவலகத்தில் இந்த வார் ரூம் அமைக்கப்பட்டுள்ளது.

தாரேஷ் அகமது, கே.நந்தகுமார், உமா, வினித், கே.பி.கார்த்திகேயன்
மற்றும் அழகுமீனா ஆகிய ஆறு ஐஏஎஸ் அதிகாரிகள் இக்குழுவில்
இடம்பெற்றுள்ளனர்.

ஏற்கெனவே உள்ள சுகாதார சேவை மையத்துடன் இந்த சிறப்பு
மையம் இணைந்து செயல்படும். இந்த மையத்தை 104 என்னும்
எண்ணில் தொடர்புகொண்டு தகவல்களைப் பெறலாம்.

ஆனால், வளர்ந்த நாடான அமெரிக்காவில் உள்நாட்டு விவகாரங்களைக்
கண்காணிப்பதற்காக முன்பிருந்தே வார் ரூம் உள்ளது. இந்தக் குழுவில்
நான்குமுதல் 10 பேர் உள்ளனர்.. இவர்கள், ஜனநாயகக் கட்சி, குடியரசுக்
கட்சி எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அவர்களைப் பற்றி நாளிதழ்கள்,
தொலைக்காட்சிகள், சமூக வலைத்தளங்கள், டிஜிட்டல் மீடியா போன்ற
வற்றில் வரும் செய்திகளைக் கண்காணித்து அரசுக்கு அறிக்கை
தருவதுதான் முதன்மையான பணி.

தினமும் காலை ஆறு மணிக்குத் தொடங்கும் இப்பணி ஒவ்வொரு
அரைமணி நேரத்திற்கும் ஒருமுறை இந்தத் தகவல்களை ஒருங்கிணைக்கும்.
இதில் வெள்ளை மாளிகை மின்னஞ்சல்கள், டிவிட்டுகள், பேட்டிகள்
போன்றவையும் அடங்கும். இதனைக்கொண்டு காலை 9.30 மணிக்கும்
மாலை 4.30 மணிக்கும் அறிக்கை தயார்செய்து இரண்டு அறிக்கைகளும்
அதிபரின் பார்வைக்கு செல்லும்.

நாடுகளைப் பாதுகாத்துக்கொள்ள எதிரிநாட்டு வீரர்களோடு
போரிட நேர்ந்தது. இப்போது உயிரைக் காத்துக்கொள்ள கண்ணுக்குத்
தெரியாத கொரோனாவோட போராட வேண்டியிருக்கிறது.
போர்க்காலங்களில் தொடங்கப்பட்ட வார் ரூம்கள் தற்போதும்
தொங்கப்பட்டுள்ளது கொரோனாவின் வீரியத்தை நன்கு உணர்த்துகின்றது.

இந்த வார் ரூமுக்கான வித்து முதன்முதலில் 1914 ஆம் ஆண்டில்
ஊன்றப்பட்டுள்ளது. ரூம் 40 என்ற பெயரில் முதல் உலகப்போரின்போது
ஒரு குழு பிரிட்டனில் உருவாக்கப்பட்டுள்ளது.

பிரிட்டன் கடற்படைக்கு உதவுவதற்காகத் தொடங்கப்பட்ட இந்தக்
குழு ஜெர்மன் வானொலி நிலையங்களுள் பகிர்ந்துகொள்ளப்படும்
தகவல்களை ஒட்டுக் கேட்கவும், ரகசியமாக உள்ள சங்கேத
வார்த்தைகளை அறிந்துகொண்டு அதற்கேற்ப திட்டங்களைத்
தீட்டவும் உதவியது.

இரண்டாம் உலகப் போரின்போது சர்ச்சில் வார் ரூம் என்ற பெயரில்
இங்கிலாந்து பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் குழு ஒன்றைத் தொடங்கி
இருந்தார்.

அண்டர்கிரவுண்ட் அறையில் செயல்பட்ட இந்த குழு போர்
யுக்திகளை வகுத்தல், களத்தில் உள்ள ராணுவ வீரர்களுக்கு
உதவுவதல் போன்ற பணிகளை செய்தது மட்டுமின்றி,
கேபினட் அமைச்சரவையும் இவ்வறையில் கூடி விவாதித்தது.

இதனால் சர்ச்சில் கேபினட் ரூம் என்றும், மேப் ரூம் என்றும்
அழைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த சர்ச்சில் வார் ரூம்
அருங்காட்சியமாக மாற்றப்பட்டு சுற்றுலாத்தலமாகிவிட்டது.

தொழில்துறை மற்றும் மிகப்பெரிய அலுவலகங்களிலும்
தற்போது வார் ரூம் என்னும் பெயரில் தனியறை அமைத்து
இருக்கிறார்கள். கார்ப்பரேட் நிறுவனங்கள், தகவல் தொழில்
நுட்ப நிறுவனங்களுள் இத்தகைய வார் ரூமைக் காணலாம்.

உற்பத்தியை அதிகரிக்கவும், இக்கட்டான நேரத்தில் தெளிவான
முடிவெடுக்கவும், நிறுவனத்தினுள் ஏற்படும் விவகாரங்களுக்குத்
தீர்வுகாணவும் இந்த வார் ரூமில் கூடி விவாதிக்கிறார்கள்.

தமிழகத்தில் தற்போது தொடங்கப்பட்டுள்ள இந்த வார் ரூம்
கொரோனா நோயாளிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல், முகக் கவசம் அணிதல்,
கபசுரக் குடிநீர் குடித்தல், சுவாசப் பயிற்சிகளை மேற்கொள்ளுதல்,
சத்தான உணவு உண்ணுதல், உடற்பயிற்சி செய்தல் போன்றவற்றை
முறையாகப் பின்பற்றினால் கொரோனாவை எளிதாக விரட்டிவிடலாம்.