அரசு வேலைக்கு தயாராகுறீங்களா? TNPSC தேர்வர்களுக்கு முக்கிய தகவல்…

185
Advertisement

பொதுவாக நம்மில் பெரும்பாலானோருக்கு அரசு வேலை வாங்க வேண்டுமென்ற கனவு இருக்கும் இருக்கும். அதற்காக, அரசு தரப்பிலிருந்து அறிவிக்கப்படும் போட்டித்தேர்வுகளின் மீது விழிவைத்து காத்திருப்போம். மேலும் அரசு பணிகளுக்கான தேர்வுகளில் லட்சக்கணக்கானோர் கலந்துகொள்வார்கள்.

இவ்வாறு நடத்தப்படும் போட்டி தேர்வுகளில் பிரபலமான ஒன்று TNPSC. இந்நிலையில் தான், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அரசு துறைகளில் உள்ள பணியிடங்களுக்கு போட்டி தேர்வை நடத்தி பணி நியமனம் செய்து வருகிறது.

TNPSC குரூப் 4 தேர்விற்கான அறிவிப்பு ஜனவரியில் அதாவது இந்த மாதம் 29,30,31 ஆகிய தேதிகளில் ஏதேனும் ஒரு தேதியில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. TNPSC தமிழ்நாடு அரசு துறைகளில் காலியாக உள்ள 15,000 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக தகுதியானவர்களை நியமிக்க உள்ளது.

லட்சக்கணக்கானோர் ஆர்வமுடன் பங்கேற்கும் இந்த குரூப் 4 தேர்வில் வெற்றி பெற வேண்டுமென்றால் சரியான முயற்சி, திட்டமிடல் போன்றவை இருக்கவேண்டும். மேலும் இந்த தேர்வை பற்றிய அடிப்படை புரிதல் இருக்கவேண்டும். இந்த தேர்விற்கு குறைந்தபட்ச கல்வித்தகுதி 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.

குரூப் 4 தேர்வு ஒரே கட்ட எழுத்து முறை தேர்வாகும். இதில் மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்படும். இதில் அனைத்து வினாக்களும் “OBJECTIVE TYPE”-ல் கேட்கப்படும். இது  பொது அறிவு, பொது தமிழ், திறனறிவு என 3 பிரிவுகள் உள்ளன. இதில், ஒரு வினாவிற்கு 1.5 மதிப்பெண் என்ற விகிதத்தில் 200 வினாக்களுக்கு 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்படுகிறது.

குரூப் 4 தேர்வின் வினாத்தாள்கள் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டிருக்கும். அதில் 100 வினாக்கள் தமிழ் பாடப்பகுதியிலிருந்தும், 100 வினாக்கள் பொதுஅறிவு பகுதியிலிருந்தும் கேட்கப்படும். இதில் 75 பொது அறிவு வினாக்களும் 25 திறனறிவு வினாக்களும் கேட்கப்படும்.

இந்த எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு வரவழைக்கப்பட்டு பின்னர் தேர்ச்சிபெற்றவர்கள் பணியமர்த்தப்படுவார்கள்.

குரூப் 4 தேர்விற்கு தயாராகுபவர்கள் குறைந்த நாட்களே இருப்பதால் அதற்கேத்தாற்போல தங்களை மெருகேற்றிக்கொள்ளவேண்டும்.

மேலும் இணையத்தில் கிடைக்கக்கூடிய இலவச மாதிரி வினாக்களை பயன்படுத்திக்கொள்ளுங்கள். ஒரு பகுதியிலிருந்து எப்படி வினாக்கள் கேட்கப்படுகிறது என்பதை பல்வேறு மாதிரி வினாக்கள் மற்றும் முந்தைய ஆண்டு வினாக்களுடன் ஒப்பிட்டு தெரிந்துகொள்ளுங்கள்.

முதல் பகுதியாக 100 வினாக்கள் தமிழிலிருந்து கேட்கப்படுகிறது. இதற்கு, 6 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான பாடப்புத்தகங்களை படிக்கவேண்டும்.

இதில் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு பாடப்புத்தகங்களை அதிக முக்கியத்துவம் கொடுத்து படிக்கவேண்டும். ஏன் என்றால் இதிலிருந்து அதிகப்படியான வினாக்கள் கேட்கப்படுகிறது.

அடுத்ததாக 6,7,8 ஆம் வகுப்பு புத்தகங்களை முழுமையாக படிக்கவேண்டும். 10 வினாக்கள் 6 முதல் 10 ஆம் வகுப்பு புத்தகங்களை தாண்டி கேட்கப்படலாம்.

இதற்கு 11 மற்றும் 12 ஆம் வகுப்பு புத்தகங்களை படித்தால் போதுமானது. தமிழுக்கு அடுத்தப்படியாக கணித பாட புத்தகத்தை படிப்பதன்மூலம் 25 வினாக்களில் 23-25 வினாக்களுக்கு சரியாக விடையளிக்கலாம்.

அடுத்ததாக பொதுஅறிவு வினாக்கள் 75 கேட்கப்படும்.இதில் 60-65 வினாக்களுக்கு விடை அளிக்கும் வகையில் தயாராகிக்கொள்ளுங்கள்.

இதில் அரசியலமைப்பு, இந்திய தேசிய இயக்கம், புவியியல், வரலாறு, அறிவியல் உள்ளிட்ட பாடங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டும்.

குரூப் 4 தேர்வை பொறுத்தவரை பள்ளி பாடப்புத்தகத்தில் இருந்து வினாக்கள் கேட்கப்படுவதால் பள்ளி புத்தகங்களை படித்தாலே தேர்வில் எளிமையாக வெற்றிபெறலாம்.

– ரிதி ரவி