இசை என்பது எல்லா உயிரினங்களையும் வசீகரிக்கும்.
இதற்குச் சான்றாக வயலின் இசைக்கு பசு ஒன்று தன்னை
மறந்து இசையில் லயிக்கும் வீடியோ ஒன்று சமூக
வலைத்தளங்களில் பரவி வருகிறது.
சர்க்கஸ் கூடாரங்களிலும் சில திரைப்படங்களிலும்
இசைக்கேற்றவாறு யானை, குதிரை, குரங்கு போன்றவை
ஆடுவதைப் பார்த்திருக்கிறோம். நடிகர் ராமராஜன் பாட்டுப்
பாடியே பசுவிடமிருந்து பால் கறந்த ‘எங்க ஊரு பாட்டுக்காரன்’
சினிமாவை யாராலும் மறக்க முடியாது.
சந்தோஷமான தருணங்களிலும் கவலையான நேரங்களிலும்
மனிதர்களுடன் இருப்பதில் முக்கிய இடம்பெறுவது இசையே.
பயண நேரத்தை இனிமை ஆக்குவதும் கவலைகளை மறக்கச்
செய்வதும் இசையே.
இசையை ரசிப்பதற்கு இசைஞானம் தேவையில்லை.
விலங்குகளுக்கும் மகிழ்ச்சி, வியப்பு, கவலை, வலி, பயம்
போன்ற உணர்ச்சிகள் உண்டு.
அதனை மெய்ப்பிக்கும் வகையில் இந்த வீடியோ அமைந்துள்ளது.
பெண்மணி ஒருவர் வயலின் இசைக்கிறார். அதைக் கேட்டு மனம்
லயிக்கும் பசு ஒன்று மெல்லமெல்ல சாய்ந்து தனது முகத்தை
அப்பெண்ணின் மடியில் சாய்த்துக்கொள்கிறது. தாலாட்டுப் பாடித்
தாய் தன் குழந்தையை உறங்க வைப்பதுபோல உள்ளது இந்த வீடியோ.
இசையால் மயங்காத இதயம் எது…?