வேறுபாடுகள் காரணமாக தனுஷின் மாறன் படத்திலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார் பாடலாசிரியர் விவேக்.
‘துருவங்கள் பதினாறு’ படத்தின் மூலம் இயக்குநரான கார்த்திக் நரேன் தற்போது மாறன் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில் தனுஷ், மாளவிகா மோகனன், சமுத்திரக்கனி, ஸ்ம்ருதி வெங்கட், மகேந்திரன், அமீர், பிரவீன், கிருஷ்ணகுமார் பாலசுப்ரமணியன் போன்ற பலர் நடித்துள்ளனர்.
‘தொடரி’, ‘பட்டாஸ்’ போன்ற படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக தனுஷின் மாறன் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது.
மாறன் படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
இப்படத்தின் மூலம் தனுஷுடன் ஐந்தாவது முறையாக ஜி.வி.பிரகாஷ் குமார் இணைந்துள்ளார்.
இதன் படப்பிடிப்பு ஹைதராபாத், சென்னை போன்ற இடங்களில் படமாக்கப்பட்டது. படத்தில் தனுஷ் பத்திரிக்கையாளராக நடிப்பதாகக் கூறப்படுகிறது.
மாறன் படத்தில் டயலாக் ரைட்டர் மற்றும் திரைக்கதை எழுத்தாளராக பாடலாசிரியர் விவேக் ஒப்பந்தமாகியிருந்தார்.
இந்நிலையில் தற்போது அவர் கிரியேட்டிவ் வேறுபாடுகள் காரணமாக மாறன் படத்திலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “கிரியேட்டிவ் வேறுபாடுகள் காரணமாக நான் மாறன் படத்தின் உரையாடல் மற்றும் திரைக்கதை எழுத்தாளரில் இருந்து விலகுகிறேன்.
எனது முடிவை மதித்த குழுவிற்கு நன்றி.
இன்று நான் உரையாடல் மற்றும் திரைக்கதை எழுத்தாளராக இந்தியாவின் மிகப்பெரிய திரைப்படத்தின் ஒரு பகுதியாக இருக்கிறேன்.
இதற்கு மாறன் தான் தொடக்கப் புள்ளி என்பதை எப்போதும் நினைவில் கொள்வேன்” எனத் தெரிவித்துள்ளார்.