பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை

298

தமிழகம் உட்பட 10க்கும் மேற்பட்ட மாநிலங்களில் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அலுவலகங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் மஞ்சேரியில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா தலைவர் ஓஎம்ஏ சலாம் வீடு உட்பட அமைப்பின் மாநில, மாவட்ட அளவிலான தலைவர்களின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமையான என்ஐஏ  மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

மேலும், தமிழகத்தில் கோயம்புத்தூர், மதுரை, நெல்லை, திண்டுக்கல், கடலூர், ராமநாதபுரம், தேனி, தென்காசி உள்ளிட்ட பல இடங்களில் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகங்கள் மற்றும் தலைவர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்படுகிறது. என்.ஐ.ஏ அதிகாரிகளின் சோதனையை கண்டித்து பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா கட்சி தொண்டர்கள் போராட்டம் நடத்தினர்.

பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்தல், பயிற்சி முகாம்களை ஏற்பாடு செய்தல் மற்றும் தடைசெய்யப்பட்ட அமைப்புகளில் சேர மக்களை ஊக்குவித்தல் போன்றவற்றில் ஈடுபட்டுள்ள நபர்களின் குடியிருப்பு மற்றும் அலுவலக வளாகங்களில் தேசிய புலனாய்வு முகமையின் இந்த சோதனை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.  தமிழ்நாடு, கேரளா,கர்நாடகா என 10 மாநிலங்களில் என்ஐஏ, அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.