சாலையோரம் எலும்புக்கூடுகளைக் குவித்த மெக்ஸிகோ மக்கள்

434
Advertisement

இறந்தவர்களின் நினைவுநாளைக் கொண்டாடுவதற்காக சாலையோரம் அமைக்கப்பட்ட பிரம்மாண்டமான எலும்புக்கூடுகள் இணையத்தில் வைரலாகத் தொடங்கியுள்ளது.

மெக்ஸிகோ நாட்டில் ஆண்டுதோறும் நவம்பர் 2 ஆம் தேதி இறந்தவர்களின் நினைவு நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. The Day Of The Dead என்று அழைக்கப்படும் இந்த நாள் மெக்ஸிகோவின் மிக முக்கியமான கொண்டாட்டங்களில் ஒன்றாகும். மெக்ஸிகன் மாயன் மற்றும் கத்தோலிக்கப் பாரம்பரியத்தின் கலவையாக இந்தக் கொண்டாட்டம் உள்ளது.ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்தக் கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது.

இறந்தவர்களின் ஆன்மாக்கள் இந்த தினத்தில் தாங்கள் வாழ்ந்த உலகத்துக்குத் திரும்பி உயிருடன் இருப்பவர்களை சந்திப்பதாக மெக்ஸிகோ மக்கள் நம்புகின்றனர்.

இந்த நினைவுத் திருநாள் துக்கத்தைவிட மகிழ்ச்சியான ஒரு விழாபோல் அங்கு கொண்டாடப்பட்டு வருகிறது. புனித நாளாகக் கருதப்படும் இந்த நாளில், குடும்பத்தினர், நண்பர்கள் அனைவரும் ஒன்றுகூடி, இறந்துபோன குடும்ப உறுப்பினர்கள், நண்பர்களை நினைவுகூர்கின்றனர். அத்துடன் அவர்களுக்கு விருப்பமான உணவைப் படைத்து வழிபடுகின்றனர்.

இந்த நாளில், நாடு முழுவதிலுமுள்ள வீடுகளில் மக்கள் தங்கள் மூதாதையர்களின் புகைப்படங்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்துகின்றனர். அவர்களின் புகைப்படங்களுக்கு சாமந்திப் பூ மாலை அணிவிப்பது, அவர்கள் விரும்பி உண்ட உணவு, பானங்களைப் படைப்பது ஆகியவற்றுடன் கல்லறைக்குச் சென்று வழிபடவும் செய்கிறார்கள்.

மேலும், நண்பர்களுக்குப் பரிசளிப்பது, இனிப்பு மிட்டாய் வழங்குவது, மண்டை ஓடு பரிசளிப்பது ஆகியவையும் இந்தக் கொண்டாட்டத்தில் இடம்பெறுகிறது.

அக்டோபர் 28 ஆம் தேதியே இந்தக் கொண்டாட்டங்கள் ஆரம்பமாகிவிடுகின்றன. இந்தக் கொண்டாட்டத்தையொட்டி, சாலையோரங்கள், சந்தைகளில் சாக்லேட்டால் உருவாக்கப்பட்ட மண்டையோடுகள் விற்கப்படுகின்றன. கடைகள், உணவகங்கள் நுட்பமான டிஷ்யூ பேப்பர்களால் அலங்கரிக்கப்படுகின்றன.

மெக்ஸிகோ மக்களின் இந்தப் புனித நாள் கொண்டாட்டத்தைக் கலாச்சாரப் பாரம்பரிய நிகழ்வாக யுனஸ்கோ அங்கீகரித்துள்ளது.