தேர்தலில் சொந்த கட்சி தோல்வி அடைய வேண்டும் என பா.ஜ.க.வின் பல தலைவர்களும் விரும்புகிறார்கள்: கெஜ்ரிவால்

175

குஜராத் சட்டசபை தேர்தலில் சொந்த கட்சி தோல்வி அடைய வேண்டும் என பா.ஜ.க.வின் பல தலைவர்களும், தொண்டர்களும் விரும்புகிறார்கள் என கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

குஜராத்தில் நடப்பாண்டு இறுதியில் நடைபெறும் சட்டசபை தேர்தலில் ஆட்சியை பிடிக்கும் நோக்கில் ஆம் ஆத்மி செயல்பட்டு வருகிறது. அதன்படி, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ச்சியாக குஜராத்திற்கு சுற்றுபயணம் மேற்கொண்டு வருகிறார். இதனையடுத்து, குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால் 300 யூனிட் இலவச மின்சாரம், வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலை வழங்கப்படும் அல்லது மாதம் 3 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் போன்ற வாக்குறுதிகளை கெஜ்ரிவால் வெளியிட்டு உள்ளார்.

இந்த நிலையில், டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் 2 நாள் பயணமாக குஜராத்துக்கு மீண்டும் சென்றார். தரம்பூரில் நடந்த பொதுகூட்டத்தில் பேசிய அவர், பா.ஜ.கவின் 27 ஆண்டுகால ஆணவத்தை நாங்கள் நொறுக்க போகிறோம் என்று கூறினார். காங்கிரஸ் தொண்டர்களும் ஆம் ஆத்மியில் இணையலாம் என பேசினார்.

பா.ஜ.க.வை சேர்ந்த பல தலைவர்களும், தொண்டர்களும் என்னை சந்தித்து, ஏதேனும் செய்து ஆளுங்கட்சியை தோற்கடியுங்கள் என ரகசியமுடன் கேட்டு கொண்டதாகவும், தங்களது சொந்த கட்சி தோல்வி அடைய வேண்டும் என விரும்பும் பா.ஜ.க.வின் தலைவர்களும், தொண்டர்களும் ஆம் ஆத்மிக்காக ரகசியமான முறையில் வேலை செய்யும்படி கூறி கொள்ள விரும்புகிறேன் என்று பேசியுள்ளார்.