இந்தியா-இந்தோனேசியா இன்று மோதல்

232

11-வது ஆசிய கோப்பை ஆக்கி போட்டி இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் நடந்து வருகிறது.

இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன.

‘ஏ’ பிரிவில் அங்கம் வகிக்கும் பிரேந்திர லாக்ரா தலைமையிலான நடப்பு சாம்பியன் இந்திய அணி முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் 1-1 என்ற கோல் கணக்கில் ‘டிரா’ கண்டது.

அடுத்த ஆட்டத்தில் ஜப்பானிடம் 2-5 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சி தோல்வியை தழுவியது.

தற்போது ஒரு புள்ளியுடன் உள்ள இந்திய அணி தனது கடைசி லீக்கில் இன்று இந்தோனேசியாவை  எதிர்கொள்கிறது.

அடுத்த சுற்றுக்கு தகுதி பெற இந்திய அணி இன்றைய ஆட்டத்தில் மிக அதிகமான கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்.

அதே நேரத்தில் ஜப்பான் அணி தனது கடைசி லீக்கில் பாகிஸ்தானை வீழ்த்த வேண்டும்.

இவ்வாறு நிகழ்ந்தால் இந்தியாவும், பாகிஸ்தானும் தலா 4 புள்ளிகள் உடன் இருக்கும்.

அப்போது கோல் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கும் அணிக்கு 2-வது சுற்று வாய்ப்பு கிடைக்கும். ஆனால் பாகிஸ்தான் அணி ஏற்கனவே இந்தோனேசியாவை 13-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியதால், அந்த அணியின் கோல் வித்தியாசம் பிளஸ் 13ஆக உள்ளது.

இந்தியாவின் கோல் வித்தியாசம் மைனஸ் 3-ல் உள்ளது.

எனவே இந்திய அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறுவது கடினம் என கூறப்படுகிறது.