Wednesday, December 11, 2024

சர்ச்சைகளை கடந்து அரியணையை பிடிக்கும் இங்கிலாந்தின் புதிய ராணி

– Shiney Miracula

1947ஆம் ஆண்டு ஜூலை 17ஆம் தேதி, இங்கிலாந்தின் தென்கிழக்கு பகுதியில் உள்ள சஸ்ஸக்ஸ் மாகாணத்தில்  பிறந்த கமீலா ரோஸ்மேரி ஷாண்டிக்கு அவர் ஒரு நாள் இங்கிலாந்தின் ராணியாவார் என தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

மதிப்புமிக்க மற்றும் செல்வாக்கு நிறைந்த குடும்பமாக இருந்தாலும், கமீலாவின் குடும்பம் அரச குடும்பம் கிடையாது. ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி தந்தை Bruce Shandஉம் தாய் ரோசலிண்டும் கமீலாவின் கல்வி, விளையாட்டு என அணைத்து செயல்பாடுகளிலும் உறுதுணையாக இருந்தனர்.

சுருக்கமாக சொல்லப்போனால், பெற்றோரின் இடைவெளியையே அதிகம் உணர்ந்த சார்லசின் குழந்தைப்பருவத்துக்கு அப்படியே மாற்றாக இருந்தது கமீலாவின் குடும்பம். பள்ளி படிப்பிற்கு பிறகு, இயல்பான நகைச்சுவை உணர்வு கொண்ட கலகலப்பான நபராக  லண்டன் சமூகத்தில் அடியெடுத்து வைத்த கமீலா ராணுவத்தில் பணியாற்றிய Andrew Parker Bowlesஉடன் காதல் வயப்பட்டிருந்தார்.

எனினும், உறுதியாக உணர முடியாத அக்காதல் அவரை குழப்ப நிலையிலேயே வைத்திருந்தது. அப்போது தான் அவர் சார்லசை சந்தித்தார். முதல் சந்திப்புகளிலேயே இருவரும் விவரிக்க முடியாத ஒரு இணைப்பை உணர்ந்தனர். அவர்களுக்குள் இருக்கும் காதலை உறுதி செய்வதற்குள் சார்லெசின் கடற்படை பயிற்சி அவரை கமீலாவை விட்டு எட்டு மாதம் பிரித்து விட்டது.

அந்த நேரத்தில் Andrew திருமணத்திற்கு propose செய்யவே,  தான் இளவரசியாக வாய்ப்பில்லை என கருதினரோ என்னவோ அத்திருமணத்திற்கு சம்மதித்து விட்டார். எனினும், சார்லசும் கமீலாவும் ஒருவரையொருவர் பிரிய முடியாமல் தவித்தனர்.

இதற்கிடையே 1981ஆம் ஆண்டு, டயானாவை சந்தித்த சார்லஸ் அவரை ப்ரொபோஸ் செய்தார்.  திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்த டயானாவுக்கு சார்லஸ் இன்னும் கமீலாவை விரும்புகிறார் எனும் உண்மை பேரிடியாய் தெரியவந்தது. 

டயானாவுக்கும் சார்லஸுக்கும் திருமணம் நடக்க இரண்டு நாட்களுக்கு முன் F மற்றும் G என பொறிக்கப்பட்ட இரு braceletகளை கண்ட டயானா, கல்யாணத்தை கைவிட எண்ணினார். Fred மற்றும் Gladys சார்லஸும் கமீலாவும் ஒருவருக்கொருவர் வைத்து கொண்ட செல்லப்பெயர்கள் ஆகும்.

இருபுறமும் வேண்டாத காதலாக பார்க்கப்பட்ட சார்லஸ் மற்றும் கமீலாவின் காதலோ வளர்ந்து கொண்டே சென்றது. 1995இல் கமீலா விவாகரத்து பெற்றதை அடுத்து, 1996இல் சார்ல்ஸ் டயானா திருமணமும் விவகாரத்தில் முடிந்தது.

மக்களால் மிகவும் விரும்பப்பட்ட இளவரசியான டயானாவை விவாகரத்து செய்ய காரணமாக கருதி ஒட்டுமொத்த இங்கிலாந்தின் வெறுப்பையும் சம்பாதித்தார் கமீலா. அதைத் தொடர்ந்து, 1997இல் உலகையே சோகத்தில் ஆழ்த்திய டயானாவின் மரணம் அரச குடும்பத்தில் பங்குபெறும் சூழல் கமீலாவுக்கு பாதகமாகவே நிலவியது.

அப்போதும், இணைபிரியாமல் இருந்த சார்லஸ் கமீலா திருமணம் 2005இல் நடைபெற்ற பின் கமீலா Princess Consort என்ற அரச பட்டத்தை பெற்றார். தற்போது தனது 70களில் இருக்கும் கமீலா, சார்லஸுக்கு உறுதுணையாக இருப்பதோடு தனக்கு ஒதுக்கப்பட்ட  அரச பொறுப்புகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

தனது பாட்டியை தாக்கிய ஆஸ்டியோபோரோசிஸ் (Osteoporosis) நோயை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவது, பெண்கள் மீது நடக்கும் வன்முறைக்கு எதிராக குரல் எழுப்புவது போன்ற சமூகப்பணிகளில் கமீலா ஈடுபட்டு வருகிறார். மேலும், புத்தகப்பிரியரான அவர் தனது இன்ஸ்டாகிராம் மூலம் சமூகவலைதள பயனர்களிடம் புத்தக வாசிப்பின் ஆர்வத்தை விதைத்து வருகிறார்.

வாழ்க்கை முழுவதும் டயானாவின் அழகு, பிரபலத்துவம் என அனைத்து அளவீடுகளிலும் ஒப்பிடப்பட்டு, ஒருகாலத்தில் பலரும் ஏற்க மறுத்த கமீலா, எலிசபெத் ராணியின் மறைவுக்கு பின் Queen Consort அந்தஸ்தை பெற்றுள்ளார்.

அரச குடும்பத்தின் அழுத்தம், டயானாவின் திருமணம், டயானாவின் மரணம் என வாழ்கையையே திருப்பிப்போட்ட தருணங்களுக்கு பிறகும் சார்லஸ் கமீலாவை தேர்வு செய்ததற்கு காரணம், கமீலாவால்  மட்டுமே தன்னை முழுமையாக புரிந்து கொள்ள முடியும் என சார்லஸ் கருதியதாக அவருக்கு நெருக்கமான நண்பர்கள் தெரிவிக்கின்றனர். கமீலாவின் இந்த வருட துவக்கத்தில் தன் மறைவுக்கு பின், கமீலா Queen Consort ஆக வேண்டும் என ராணி இரண்டாம் எலிசபெத், அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

Latest news
Related news

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!