சலிப்படைந்த குரங்குகள்…..உற்சாகப்படுத்திய இசைக் கச்சேரி

246
Advertisement

குரங்குகளுக்காக நடத்தப்பட்ட இசைக்கச்சேரியின் வீடியோ வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

பொதுவாக, விழாக்காலங்களின்போதும், சுப நிகழ்ச்சிகளின்போதும் இசைக்கச்சேரி நடத்துவது வழக்கம். அந்த நிகழ்ச்சிகளின்போது அங்கு வருகை தரும் உறவினர்கள், நண்பர்கள், அக்கம்பக்கத்தினர் அனைவரையும் மகிழ்விக்க நடத்தப்பட்டு வரும் இசைக் கச்சேரி, தற்போது குரங்குகளுக்காக நடத்தப்பட்டுள்ளது.

ஆனால், கச்சேரி நடத்தப்பட்டதற்கான காரணம்தான் விநோதமாக உள்ளது.

இங்கிலாந்தில் நடத்தப்பட்ட அந்தக் கச்சேரி, அங்குள்ள பார்பரி மக்காக்யூஸ் என்னும் இனத்தை அழிவிலிருந்து காப்பாற்றி, அவற்றின் இனப்பெருக்கத்தை அதிகரிப்பதற்காக நடத்தப்பட்டுள்ளது.

இந்த வகைக் குரங்குகள் வேட்டையாடுதல், கடத்தல் ஆகியவற்றின் காரணமாக அழிந்துவருகிறது. தற்போது வெறும் 8 ஆயிரம் குரங்குகளே அந்த நாட்டில் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதன் எண்ணிக்கையை அதிகரிக்க விரும்பிய ஓய்வுபெற்ற வனத்துறை அதிகாரிகள் செய்த அதிரடியான செயல்தான் இந்தக் கச்சேரி.

இதற்காகப் பழம்பெரும் பாடகரான மார்வின் கயேவைப்போல் தோற்றம்கொண்ட டேவ் லர்ஜியே என்னும் இளைஞரை அந்தப் பணிக்கு அமர்த்தியுள்ளனர். அந்த நபரும் குரங்குகள்முன் தோன்றி பல பாடல்களைப் பாடி அசத்தியுள்ளார்.

அந்த இசைக் கச்சேரியைக் கேட்டு குரங்குகள் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்ததாகவும், காதல் சைகைகளில் ஈடுபட்டதாகவும், ஒன்றுக்கொன்று தலைவாரிக்கொண்டு இருந்ததாகவும் கச்சேரிக்கு ஏற்பாடு செய்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த கச்சேரி முயற்சிக்குப் பலன் கிடைத்தால், பார்பரி இனக் குரங்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். பொறுத்து இருந்துதான் தெரிந்துகொள்ள வேண்டும்.