போதையில் நண்பனுக்குத் தாலி கட்டிய டிரைவர்

241
Advertisement

குடிபோதையில் தன் நண்பனுக்கே தாலிகட்டிய டிரைவரின் செயல்
சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஓரினச் சேர்க்கைத் திருமணங்கள் உலகின் பல பகுதிகளில்
நடந்துகொண்டுதான் இருக்கின்றன. பெண்ணும் பெண்ணும்
ஆணும் ஆணும் திருமணம்செய்துகொண்டு மகிழ்ச்சியாக
வாழ்ந்துவருகின்றனர்.

அதிலும், விநோதமாக ரோபோவைத் திருமணம் செய்த ஆணும்,
குக்கரைத் திருமணம் செய்த ஆணும், பிங்க் நிறத்தைத் திருமணம்
செய்த பெண்ணும், தன்னைத் தானே திருமணம்செய்த பெண்ணும்
உலகின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்தனர்.

அவற்றில் மாறுபட்ட நிகழ்வாக அமைந்துள்ளது அண்மையில்
தெலுங்கானாவில் நிகழ்ந்த ஒரு திருமணம்.

மதுபோதை தலைக்கேறிய நிலையில் தன் நண்பணுக்கே
தாலிகட்டி அதிர வைத்துள்ள சம்பவம்தான் அது.

தெலுங்கானா மாநிலம், சங்காரெட்டி மாவட்டம், ஜோகிபேட்
பகுதியைச் சேர்ந்தவர் 21 வயது இளைஞர். அங்குள்ள மெடக்
மாவட்டத்தைச் சேர்ந்தவர் 22 வயது ஆட்டோ ஓட்டுநர்.
இருவருக்கும் நட்புப் பாலமாக அமைந்தது டுமாபால்பேட்
பகுதியிலுள்ள ஒரு மதுக்கடை. தினமும் அங்கு இருவரும் மது
அருந்த வந்தபோது அறிமுகம் ஏற்பட்டு நெருங்கிய நண்பர்களாகி
விட்டனர்.

குடிப்பதுபோக மீதியுள்ள நேரத்தில் தங்கள் வேலைகளைச்
செய்துவந்த அந்த நவீன இளைஞர்கள் ஏப்ரல் 1 ஆம் தேதியில்
வழக்கம்போல் மதுபானக்கடைக்கு வந்துள்ளனர். முட்டாள்கள்
தினத்தில் தங்களின் அறிவுத் திறனை வளர்த்துக்கொள்ள
முனைந்த அவர்கள் ஹோமோசெக்ஸ் குறித்து நீண்டநேரம்
கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.

அந்த உரையாடலின் முடிவில் அவர்கள் ஓரினச் சேர்க்கைத்
திருமணம் செய்துகொள்ளத் தீர்மானித்தனர். போதையின்
துணையிருக்க, அருகிலுள்ள வழிபாட்டுத்தலத்துக்குச்சென்று
நண்பனின் கழுத்தில் தாலிகட்டி மனைவியாக்கிக்கொண்டார்
ஆட்டோ டிரைவர்.

திருமணம் முடிந்து மறுவீட்டுக்குச் செல்வதற்குப் பதிலாக
அவரவர் வீட்டுக்குச்சென்றுவிட்டனர். மறுநாள் காலையில்
போதை தெளிந்த நிலையில், தனது கணவரைத் தேடி மாமியார்
வீடான ஆட்டோ ஓட்டுநர் இல்லத்துக்குச் சென்றார் அவரது இளம்
மனைவியான இளைஞர்.

அங்கே மாமியாரிடம் தன் கணவரைத் தன்னுடன் அனுப்பி
வைக்கும்படி மன்றாடினார்.

புதுமருமகளாக வந்த இளைஞரை வரவேற்பதற்குப் பதிலாக
வீட்டைவிட்டே துரத்தியடித்தார் மாமியாரான ஆட்டோ டிரைவரின் அம்மா.

துரத்தியடிக்கப்பட்ட சோகத்தில் காவல்நிலையம் சென்ற அவர்,
ஆட்டோ டிரைவரான தன் கணவரைத் தன்னுடன் சேர்த்துவைக்கும்படி
காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

பெற்றோரும் வீட்டைவிட்டு துரத்தியடிக்க, புகுந்த வீட்டில் மாமியாரும்
துரத்தியடிக்க வாழவழி தெரியாத அந்தப் புதுமனைவி இழப்பீடாக
1 லட்ச ரூபாய் வேண்டுமென்றும், தனியாக வசிக்க வேண்டியுள்ள
அந்தப் பணத்தை மாமியார் வீட்டாரிடமிருந்து பெற்றுத்தர வேண்டும்
என்றும் போலீசில் புகார்செய்தார்.

முடியாது முடியாது அம்புட்டுப் பணம் எங்க கிட்ட இல்ல என்று மறுத்த
மாமியார் குடும்பம் மருமகளான இளைஞருக்குக் கைவிரித்துவிட்டது.

என்றாலும், பெண் பாவம் பொல்லாது என்பதால், இளம் மருமகளான
இளைஞருக்கு 10 ஆயிரம் கொடுத்து இனிமேல் ஒட்டோ உறவோ இல்லை
என்று எழுதிவாங்கிக்கொண்டு அனுப்பிவிட்டது.

குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு என்பது இதுதானா? கலிகாலத்துல
இதுவும் நடக்கும் இதுக்குமேலயும் நடக்கும்.