44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் இன்று மாலை கோலாகலமாக தொடங்க உள்ளது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு செஸ் ஒலிம்பியாட்டை தொடங்கி வைக்க உள்ளார்.
44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று தொடங்கி ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 187 நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீரங்கனைகள் பங்கேற்கின்றனர். கடந்த ஒரு வாரமாக செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்க சென்னை வந்த வெளிநாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகளுக்கு தமிழக அரசு சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
வீரர்கள், சர்வதேச சதுரங்க கூட்டமைப்பினர் மற்றும் விருந்தினர்கள் தங்குவதற்காக நவீன வசதிகளுடன் கூடிய 2 ஆயிரம் அறைகள் மற்றும் வாகன வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று மாலை நடைபெறுகிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்துக்கொண்டு, செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்க உள்ளார். இதற்காக நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தொடக்க விழாவில் 600க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்கும், பல்வேறு கண்கவர் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. இதில் பல்வேறு மாநிலங்களின் பராம்பரிய கலைநிகழ்ச்சிகள் இடம்பெற உள்ளன.
மேலும், 44வது செஸ் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொள்ள நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் மற்றும் அஜித் ஆகியோருக்கு ஆல் இந்திய செஸ் அசோசியேஷன் சார்பிலும், தமிழக அரசு சார்பிலும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.