ஸ்மார்ட் போன்களில் உள்ள பணம் அனுப்பும் செயலிகள் மூலமாகவும், க்யூ ஆர் கோடு ஸ்கேனர்கள் மூலமாகவும் மட்டுமே பணம் அனுப்பும் வசதி இருந்து வரும் நிலையில், இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்ததாஸ் பட்டன் போன்களுக்கான பண பரிமாற்ற வசதி புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளார்.
Feature Phone எனும் கீபேட் கொண்ட பேசிக் மாடல் போன்களுக்கான புதிய பிரத்யேக யுபிஐ(UPI) வசதியை இந்திய ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்துகிறது. இந்த யுபிஐ வசதிக்கு “123PAY” என பெயரிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விதமாகவும், கிராமங்களில் உள்ளவர்கள் பயனடையும் விதமாகவும் ரிசர்வ் வங்கி இந்த திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் 40 கோடி பேர் பயனடைவார்கள் என ஆர்பிஐ ஆளுநர் சக்திகாந்த் தாஸ் தெரிவித்துள்ளார்.
சாதாரண செல்போன் வைத்துள்ள வாடிக்கையாளர்கள், தங்களது வங்கி கணக்குடன் முன்கூட்டியே இந்த ‘யுபிஐ-123 பே’ சேவையைப் பயன்படுத்த இணைத்திருந்தால் மட்டும் போதுமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், கிராம புறங்களில் உள்ளவர்களுக்கும் டிஜிட்டல் பொருளாதாரம் கிடைக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது.