போலீஸ் அலட்சியம்… இளம்பெண் விபரீத முடிவு

192
Advertisement

மருத்துவமனையில் உயிருக்குப்போராடியபடி ஒரு பெண் பேசிய வீடியோ வாக்குமூலம் வெளியாகி, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில் ”தனது கணவரின் நண்பர் ஒருவருக்கு தனியார் பைனான்ஸ் மூலமாக கடன் வாங்கி கொடுத்ததாகவும், கடன் வாங்கிய அந்த நபர் ஒரு சில மாதத்தில் ஊரை காலி செய்துவிட்டு வெளியூர் சென்று விட்டார்.

இதனால் தன்னை அந்த தனியார் பைனான்ஸ் நிறுவன ஊழியர்கள் அலுவலகதிற்கு மாலை 5 மணிக்கு அழைத்து சென்று இரவு 9 மணிக்கு டார்ச்சர் செய்ததாகவும், தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும், ஆபாசமாக நடந்துகொண்டதாகவும் அந்த விடீயோவில் தெரிவித்திருந்தார்.

இது குறித்து சத்தியம் செய்தியாளர் விசாரிக்க ஆரம்பித்தபோது, அந்த பெண் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கண்ணார சந்து தெருவைச் சேர்ந்த பாத்திமா பீவி என்பது தெரிய வந்தது. பாத்திமா பீவி தனது கணவர் ஜெய்லானியின் நண்பர், அமீதுக்கு தனியார் ஃபைனான்ஸ் மூலமாக எல்.இ.டி டிவி கொடுத்துள்ளார்.

கடனைப் பெற்றுக்கொண்ட அமீது ஒரு சில மாதத்தில் ஊரை காலி செய்துவிட்டு நைஸாக வெளியூர் சென்று விட்டார். இந்தநிலையில், தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் பாத்திமா பீவி வாங்கி கொடுத்த கடனுக்காக, மூன்று மாதங்கள் வட்டி கட்டி உள்ளார். அதற்குமேல், வட்டி கட்ட முடியாத நிலையில், தனியார் பைனான்ஸ் நிறுவனத்தின் ஊழியர்கள் பாத்திமா பீவியை வட்டி கட்ட சொல்லி தொடர்ந்து தொந்தரவு செய்து வந்துள்ளனர்.

இதனால் பாத்திமா பீவி தனக்கு தெரிந்தவர்களிடம் பணம் கேட்டுள்ளார். இந்நிலையில், வேறொரு பைனான்ஸ் நிறுவனத்தில் பணம் வாங்கி தருவதாக நண்பர் ஒருவர் அழைத்துச் சென்றுள்ளார். ஆனால், அங்கு சென்றபோதுதான், இது கடன் வாங்கி கொடுத்த, அதே பைனான்ஸ் என்பது தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், அந்த பைனான்ஸ் ஊழியர்கள் பாத்திமாவிடம் தரக்குறைவாக நடந்துகொண்டதோடு, தகாத வார்த்தைகளில் பேசியும், அவரிடம் இருந்து வீட்டு சாவியை வாங்கிக்கொண்டு வீட்டிலிருந்த டிவியை எடுத்துச் சென்று விட்டதாக கூறப்படுகிறது. மேலும், இருசக்கர வாகனத்தில் பாத்திமா பீவியை அழைத்து வந்து வீட்டில் இறக்கி விட்டு விட்டு, பொங்கல் பண்டிகையையொட்டி ரேஷன் கடையில் கொடுத்த ஆயிரம் ரூபாய் பணத்தையும் வாங்கி சென்றதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் மன உளைச்சலுக்கு ஆளான பாத்திமா பீவி வீட்டில், ஆள் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். உறவினர்கள் அவரை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும், மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி பாத்திமா பீவி உயிரிழந்தார்.

இந்த நிலையில் பைனான்ஸ் ஊழியர்கள் தன்னை கொடுமைப்படுத்தியது குறித்து உயிரிழப்பதற்கு முன்பு அவர் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி தீவிரமாக பரவியது. இதனையடுத்து இதுகுறித்து நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் கந்து வட்டி என்றாலே கரூர் காவல் நிலைய காவலர்கள் முறையாக நடவடிக்கை எடுப்பது இல்லை என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளனர்.

1957-ம் ஆண்டு தமிழ்நாடு கடன் கொடுப்போர் சட்டத்தில், எது எவ்வாறு இருப்பினும் எவரொருவர் பிரிவு 3-ன் கீழ் உத்தரவாதத்தை மீறுவாராயின் அல்லது கடன் தொகையை வசூல் செய்ய எவரேனும் கடனாளியைத் தொந்தரவு அல்லது தொந்தரவு செய்ய உடந்தையாக இருப்பாராயின், மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையுடன் ரூ.30 ஆயிரம்வரை அபராதமும் விதிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 2003ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் கந்து வட்டி வசூலித்தல் தடைச்சட்டமும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், திருச்சி அரசு மருத்துவமனையில் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், இதில் தொடர்புடைய நிதி நிறுவனத்தைச் சேர்ந்த கரூர் பவித்திரம் பகுதியைச் சேர்ந்த 65 வயது சந்திரசேகரன், வீரராக்கியம் காமராஜ் நகர் பகுதியைச் சேர்ந்த 32 வயது நாகராஜ் மற்றும் ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள சுமைதாங்கி புதூர் பகுதியைச் சேர்ந்த 22 வயதான கார்த்தி ஆகிய மூன்று பேரை கைது செய்து, கரூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, கரூர் கிளை சிறையில் அடைத்தனர். 

இதில் காவல்துறையினர் சரியான முறையில் விசாரணையை மேற்கொள்ளாததால் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரபாகர், உத்தரவின்பேரில் ஆயுதப்படைக்கு இரண்டு காவலர்களை மாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.