நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்த டான்சிங் பாட்டிகள்

223
Advertisement

தங்களின் நடனத்தால் ஒட்டுமொத்த நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளனர் பாட்டிகள்.

சீனா முழுவதும் நடுத்தர வயதுப் பெண்களும் பாட்டிகளும் அதிகாலை வேளை அல்லது மாலை வேளையில் பூங்கா அல்லது பொது இடங்களில் கூடி சீன இசைக்கு ஒன்றாக நடனமாடுகின்றனர். இவர்களை டான்சிங் பாட்டிகள் என்று அழைக்கின்றனர்.

தங்களின் நடனத்தை டான்சிங் பாட்டிகள் கலாச்சாரப் புரட்சியாகக் கருதுகிறார்கள். சீனா முழுவதும் 10 கோடி நடனப் பாட்டிகள் உள்ளதாக சௌத் சீனா மார்னிங் போஸ்ட் கூறுகிறது.

சதுர வடிவில் நின்றுகொண்டு ஆடும் இந்த நடனம் சீனாவில் தற்போது பிரபலமாக உள்ளது. வர்த்தக நடவடிக்கைகளுக்காக இந்த நடனத்தை பெரிய நிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்கின்றன.

டான்சிங் பாட்டிகளின் இந்தச் செயல் பலருக்கு ஆனந்தமாகவும், சிலருக்கு இம்சையாகவும் மாறியுள்ளது. அதேசமயம், மோதலுக்கும் வழிவகுத்துள்ளது. என்றாலும், இந்தப் பிரச்சினையைத் தீர்த்துவைக்கத் துப்பாக்கிப் பாணியிலான சாதனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நடனமாடும் இடத்திலிருந்து 50 மீட்டர் தொலைவைத்தாண்டி சத்தம் கேட்காதவாறு ஸ்பீக்கரை இந்தத் துப்பாக்கி தடுத்துவிடுமாம். அதனால் நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றனர் இருதரப்பினரும்.

வயதானவர்களின் மருத்துவச் செலவையும் நிதிச்செலவையும் குறைப்பதற்கு இந்த நடனங்கள் உதவுவதாகவும், அவர்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்து நீண்ட ஆயுளுக்கு வழிவகுப்பதாகவும் சீன அரசு ஊடகம் கூறியுள்ளது.

வயதாகிவிட்டதே என இனி கவலை வேண்டாம் நம்ம ஊர்ப் பாட்டிகளே…