மேட்ரிமோனியல் வில்லன்கள்… இளம்பெண்களே உஷார்

198
Advertisement

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருமங்கைசேரி பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், கடந்த டிசம்பர் மாதம் எஸ்.பி., அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார்.

அந்த புகாரில் ”தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம்  பக்கத்தில இருக்குற திருமங்கைசேரி பகுதியில் ரெண்டு குழந்தைகளுடன் வாழ்ந்த்துக்கிட்டிருக்கேன். என்னோட கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நல குறைவால் இறந்துட்டாரு.

இதனால, இரண்டாவது திருமணத்திற்காக மேட்ரிமோனி ஆன்லைனில் பதிவு செய்தேன். கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19 ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் சொக்கனந்தல் பகுதியைச் சேர்ந்த  34 வயது சக்கரவர்த்தங்குறவர் என்னுடைய விபரங்களைப் பார்த்து திருமணம் செய்து கொள்வதாக சொன்னார்.

அதுவும், ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்து வர்றதாகவும், ஐ.டி., நிறுவனத்தில் பணியாற்றி வருவதாகவும் சொன்னார். தான் ஒரு பணக்காரர் என்பதால் திருமணம் செய்யும் பெண்ணின் பணம், நகைகள் எல்லாம் தேவையில்லை. பணம், நகைகளுக்கு மதிப்பளிக்காமல் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் உள்ள பெண்ணை தேடி வருவதாகவும் சொன்னார்.

தனக்கு திருமணமான நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு சாலை விபத்தில் தனது மனைவி இறந்து விட்டதாகவும் என்னிடம் சக்கரவர்த்தி தெரிவித்தார். இதை நம்பி என்னோட பர்சனல் விஷயங்களையும் சொல்லி சக்கரவர்த்தியிடம் பழகினேன். கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 25 ஆம் தேதி, கும்பகோணத்தில் என்னை வந்து சந்தித்த சக்கரவர்த்தி, மூன்று மாதம் கழித்து திருமணம் செய்துக்கொள்வதாகவும், என்னையும் என் குழந்தையும் பத்திரமாக பார்த்துக் கொள்வதாகவும் ரொமப அன்பா பேசினார். அவர்மேல எனக்கு ரொம்ப நம்பிக்கை வர ஆரம்பிச்சிடுச்சு.

இந்த சூழலில்தான், ஷேர் மார்க்கெட் தொழிலுக்கு அவரசமாக பணம் தேவைப்படுதுன்னு சொல்லி சக்கரவர்த்தி என்கிட்ட பணம் கேட்டார். எவ்ளோ பெரிய ஆளா இருந்தாலும் பிசினஸ்ல நஷ்டம் ஏற்படும். திருமணம் செய்துக்கொள்ளப்போறவர்தானே தானே அப்படின்னு நம்பி, எனது குழந்தைகளின் பெயரில் இருந்த வைப்பு நிதி 28 லட்சம் ரூபாய், 14 சவரன் நகை மற்றும் விலையுயர்ந்த மொபைல் போன் எல்லாமே கொடுத்தேன்.

ஆனா, அதுக்கப்புறம் கொஞ்சம் கொஞ்சமாக பேசுறதை நிறுத்தின சக்கரவர்த்தி, வாட்ஸ் அப் காலில் மட்டுமே என்னிடம் பேசி வந்தார். அதன்பிறகு, பேசுறதை முற்றிலுமாக நிறுத்திக்கிட்டார். தொடர்புகொள்ள முயற்சித்தபோது அவரை தொடர்புகொள்ள முடியல” என்று காவல்நிலையத்தில் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

மேலும், தன்னை ஏமாற்றிய சக்ரவர்த்தி மீது நடவடிக்கை எடுத்து தன்னுடைய பணம் மற்றும் நகைகளை மீட்டு தருமாறு புகாரில் தெரிவித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் திருவிடைமருதுார் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். தொடர்ந்து தனிப்படை அமைத்த காவல்துறையினர் தலைமறைவாக இருந்த சக்கரவர்த்தியை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், தலைமறைவாக இருந்த சக்கரவர்த்தியை காவல்துறையினர் கைது செய்தனர்.

மேலும் அவரிடம் இருந்து 15 பவுன் தங்கநகைகள் மற்றும் 2 லட்சம் ரூபாய் ரொக்க பணம், செல்போன் மற்றும் ஒரு சொகுசு கார் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

இதனைத்தொடர்ந்து, சக்கரவர்த்தியின் செல்போனை ஆய்வு செய்துவரும் காவல்துறையினர் இதுபோல் வேறு எந்த பெண்ணையும்  ஏமாற்றியுள்ளாரா என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருமண தகவல் மையங்களை அணுகும் ஆண், பெண் இருவருமே எச்சரிக்கையாக இருக்கவேண்டும். வரனை தேடும்போது அந்த ஆண் அல்லது அந்த பெண் எப்படிப்பட்டவர், தனது வாழ்க்கைக்கு சரியானவரா? தனது குணாதிசயங்களுக்கு ஒற்றுப்போகிறவரா என்பதையெல்லாம் அறிந்துகொள்ள நேரில் சந்தித்து பேசுவதோ, நட்புடன் பழகுவதோ தவறில்லை. ஆனால், அந்த நட்பு திருமணத்துக்கு முன்பே எல்லை மீறிவிடக்கூடாது. மேலும், மேட்ரிமோனியலில் வரனை தேடி பிடித்ததும் இரண்டு வீட்டாரும் பேசி திருமணம் செய்துகொள்ளும்வரை பணம், நகைகள் கொடுப்பதில் உஷாராக இருக்கவேண்டும் என்பதே காவல்துறையின் எச்சரிக்கை ஆலோசனை.

-சதாம் ஹுசைன்