செந்தில்பாலாஜி மீது இவ்வளவு குரூரம் ஏன்? நெஞ்சுவலி வரும் அளவுக்கு நெருக்கடி தருவதா?

132
Advertisement

விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பேன் என்று செந்தில்பாலாஜி கூறியதும், நெஞ்சுவலி ஏற்படும் அளவுக்கு நெருக்கடி கொடுத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


அமலாக்கத்துறை அதிகாரிகளை ஏவியவர்களின் குரூர சிந்தனை இதன் மூலம் வெளிவருவதாகவும் அதனை சட்டப்படி செந்தில் பாலாஜி சந்திப்பதாகவும் முதல்வர் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் விடுத்துள்ள பரபரப்பு அறிக்கை வருமாறு;
”தன் வசம் இருக்கும் விசாரணை அதிகாரிகள் மூலமாக தனக்கு எதிரான அரசியல் சக்திகளை பாஜக பழிவாங்கும். அவர்களுக்குத் தெரிந்த ஒரே வழி இது மட்டும் தான் என்று நான் ஏற்கனவே சொல்லி இருந்தேன். இது மாதிரியான நடவடிக்கைகளை தொடர்ந்து செய்வார்கள் என்றும் சொல்லி இருந்தேன்.

விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருகிறேன் என்று சொன்ன பிறகும் சித்ரவதை செய்யும் நோக்கத்துடன் ஏன் செயல்பட வேண்டும்? இந்த வழக்கிற்கு தேவையான சட்ட நடைமுறைகளை மீறி அமலாக்கத்துறை அதிகாரிகள் இவ்வளவு மனிதநேயமற்ற முறையில் நடந்து கொள்வது தேவையா? அதிகாரிகளை ஏவியவர்களின் குரூர சிந்தனை இதன் மூலம் வெளிப்படுகிறது. என்ன வழக்கோ அதனை சட்டப்படி செந்தில் பாலாஜி சந்திப்பார்.

எங்களது அரசியல் நிலைப்பாடு எதுவோ அதில் நாங்கள் உறுதியாகத் தொடர்வோம். இந்த வழக்கை சட்ட ரீதியாக தி.மு.க. உறுதியுடன் எதிர்கொள்ளும். பா.ஜ.க.வின் இந்த மிரட்டல்களுக்கு எல்லாம் தி.மு.க. அஞ்சாது. இந்த அடக்குமுறைகளை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். 2024 தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.”