ஏன் வேண்டும் ஹால்மார்க்…?

254
Advertisement

2021 ஆண்டு, ஜுன் 1 ஆம் தேதிமுதல் தங்க நகைகளுக்கு
ஹால்மார்க் முத்திரைக் கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்தது.

இதன்படி, 2021, ஜுன் மாதம் 15 ஆம் தேதிமுதல் 14, 18 மற்றும்
22 கேரட் தங்க நகைகளை மட்டுமே விற்பனை செய்யலாம்.
இதற்குக் குறைந்த தரம் உடைய தங்க ஆபரணங்களை
விற்பனை செய்யக்கூடாது.

ஹால்மார்க் முத்திரையை பிஐஎஸ் எனப்படும் (BUREAU OF
INDIAN STANDARDS) இந்தியத் தரக்கட்டுப்பாட்டு
நிறுவனம் வழங்கிவருகிறது. 1986 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட
இவ்வமைப்பு மத்திய அரசின் நுகர்வோர் விவகாரம் மற்றும்
உணவு, பொது விநியோக அமைச்சகத்தின்கீழ் இயங்கி வருகிறது.

இதற்கானத் தலைமை அலுவலகம் பழைய தில்லியில் உள்ளது.
இதன் பொதுஇயக்குநராக ஓர் ஐஏஎஸ் அதிகாரி இருப்பார்.

இந்தியாவில் தயாரிக்கப்படும் எல்லாப் பொருட்களின் தரத்தையும்
உறுதிப்படுத்தி சான்றளித்தலே இவ்வமைப்பின் முதன்மையான
பணியாகும். நுகர்வோருக்குத் தரமான பொருட்கள் கிடைக்கச்
செய்து இந்தியர்களின் நலனைப் பேணுவதற்காக இந்தத் தரச்
சான்றிதழ் அவசியமாகிறது. பிஐஎஸ் சான்றிதழ் ஏற்றுமதி,
இறக்குமதிக்கும் பெரிதும் பயன்படுகிறது.

தரமான, கலப்பிடமற்ற பொருட்களை நுகர்வோர் பெறவேண்டும்
என்பதே இதன் பிரதான நோக்கம். ஹால்மார்க் முத்திரை என்பது
தங்கம் மற்றும் வெள்ளி ஆகிய இரண்டு உலோகப் பொருட்களுக்கு
மட்டுமே வழங்கப்படுகிறது.

சர்வதேச அளவுகோலுடன் ஹால்மார்க் முத்திரை வழங்கப்படுவதால்
தரத்திற்கான ஹால்மார்க் முத்திரையை உலகின் பல நாடுகள் ஏற்றுக்
கொண்டுள்ளன. எனவே, நகைக்கடைக்காரர்கள் ஹால்மார்க் முத்திரை
பெற்றபிறகே விற்பனை செய்யமுடியும்.

1985 ஆம் ஆண்டு இந்தியாவில் 85 டன் தங்கம் விற்பனையானது.
தற்போது 800 டன்களுக்குமேல் விற்பனையாகிறது. இதில் 80
சதவிகிதம் ஆபரணம் செய்யவும், 15 சதவிகிதம் நாட்டுத்
தேவைக்காகவும், 5 சதவிகித தங்கம் தொழிற்துறைப்
பயன்பாட்டுக்காகவும் வாங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் சிறிதும் பெரியதுமாக ஒரு லட்சத்துக்கும் மேலான
தங்க நகைக்கடைகள் உள்ளன. 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வைர
நகைக் கடைகள் உள்ளன. ஆபரணங்களுக்கு மட்டுமன்றி, முதலீட்டு
நோக்கத்துக்காகவும் தங்க நகை வாங்கப்படுதல் அதன் தரத்தையும்
கலப்படமற்றத் தன்மையையும் உறுதிப்படுத்தும் நோக்கத்தில் 2000 மாவது
ஆண்டிலிருந்து தங்கத்துக்கு ஹால்மார்க் தரமுத்திரை வழங்கப்பட்டு
வருகிறது.

2005 ஆம் ஆண்டிலிருந்து வெள்ளி நகைகளுக்கு ஹால்மார்க்
முத்திரை வழங்கப்படுகிறது.

தங்கத்தை மதிப்பீடு செய்வதற்காகவும் தரமுத்திரை
பெறுவதற்காகவும் அதற்கான ஆய்வகங்களில் நகைகளை
அளிக்க வேண்டும். இந்த ஆய்வகங்கள் சென்னை, சாஹிதாபாத்,
கொல்கத்தா, புதுடெல்லி, ஜெய்ப்பூர், ஜெய்பூர், உதய்ப்பூர் நகரங்கள்
உள்பட 959 இடங்களில் ஹால்மார்க் ஆய்வகங்கள் உள்ளன.

தங்க நகைகளுக்காக ஜிஎஸ்டி வரியுடன் ரூ 35ம், வெள்ளி
ஆபரணங்களுக்காக ரூ 25ம் கடைகளில் வசூலிக்கப்படும்.

தரம் நிரந்தரம்….