தமிழக வேளாண் பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பின்படி, ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 2 கிலோ கேழ்வரகு விநியோகிக்கும் திட்டம் முதற்கட்டமாக நீலகிரி, தருமபுரி மாவட்டங்களில் இன்று அமல்படுத்தப்பட உள்ளது. உதகை அருகே உள்ள பாலகொலா கிராமத்தில் முதல்முறையாக இந்த திட்டம் தொடங்கப்பட உள்ளது.
இந்த திட்டத்தை அமைச்சர்கள் பெரிய கருப்பன், சக்கரபாணி, கா.ராமச்சந்திரன் ஆகியோர் தொடங்கி வைக்க இருப்பதாக கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ரேஷன் கடைகளில் கேழ்வரகு வழங்கும் திட்டம் இன்று தொடங்கப்பட உள்ள நிலையில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள வாணிப கழக உணவு பொருள் கிடங்கினை ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரத்த சோகையை கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்ட கேழ்வரகு விநியோகம் திட்டம் மூலம் நீலகிரி மாவட்டத்தில் 2 லட்சத்து 29 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள் என்றும் நீலகிரி, தருமபுரி மாவட்டங்களுக்கு ஆயிரத்து 350 டன் கேழ்வரகு இந்திய உணவு கழகத்தின் மூலம் மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ரேஷன் கடைகளில் கேழ்வரகு விநியோகிக்கப்படும் திட்டம், பிற மாவட்டங்களுக்கும் விரிவுப்படுத்த, கூடுதல் கேழ்வரகை, கர்நாடகாவில் இருந்து கொள்முதல் செய்ய மத்திய அரசிடம் அனுமதி பெறப்படும் என்றும் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.