மீன் பிடிப்பதற்காகப் புதுமையான முறையில் அமெரிக்கர் கட்டிய வீடு இணையத்தைக் கவர்ந்து வருகிறது.
அமெரிக்காவின் ஸ்கியாடூக் என்னும் பகுதியில் வசித்துவரும் பால் பிலிப்ஸ் ஒரு குளத்தின்மேல் வீட்டைக் கட்டியுள்ளார்.
மீன் பிடிப்பதில் ஆர்வமுள்ளவரான பால் பிலிப்ஸ் இதற்காக ஓர் ஏக்கர், 24 சென்ட் பரப்பளவு கொண்ட ஊருணியை உருவாக்கி, அதன்மீது பாதி நீரிலும் பாதி நிலத்திலும் உள்ளவாறு புதுமையான முறையில் வீட்டைக் கட்டியுள்ளார். 1,750 சதுர அடியுள்ள இந்த மர வீட்டில் 2 படுக்கையறை, ஒரு குளியலறை உள்ளது.
இந்த ஊருணியில் சிறிய கடற்கரை, பூங்கா போன்றவற்றையும் ஏற்படுத்தியுள்ளார்.
பழங்காலக் கலைப்பொருட்கள் விற்பனைக் கடை, ஒரு பேக்கரி, ஒரு பாரம்பரிய மருந்துக்கடை, ஒரு நடன ஸ்டூடியோ, ஒரு பார் ஆகியவையும் உள்ளன. இதனால், இந்தப் பகுதி ஒரு சுற்றுலாத் தலமாக உருவெடுத்துவிட்டது.
இதற்காக நகர்ப்புறத்திலுள்ள 3 படுக்கையறை, 3 குளியலறை கொண்ட 1,850 சதுர அடி வீட்டை விற்கவுள்ளார் பால் பிலிப்ஸ்.
சமூக வலைத்தளங்களில் இந்த வீடு தற்போது பிரபலமாகி வருகிறது.