தமிழகத்தில் கொரோனா பொதுமுடக்க கட்டுப்பாடுகளில் கூடுதல் தளர்வுகளை அறிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் நவம்பர் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அனைத்து வகை கடைகள், உணவகங்கள் மற்றும் பேக்கரிகள் இரவு 11 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும் என்ற கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளது.
அனைத்து வகை உள் மற்றும் வெளி விளையாட்டு அரங்குகளில் பயிற்சிகள், விளையாட்டு போட்டிகள் நடத்தவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சிகிச்சை தேவைகளுக்காக நீச்சல் குளங்களை பயன்படுத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நவம்பர் ஒன்றாம் தேதி முதல் திட்டமிட்டபடி, ஒன்று முதல் 8ஆம் வகுப்பு வரை சுழற்சி முறையில் பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் ஒன்றாம் தேதி முதல் திரையரங்குகள் 100 சதவீத பார்வையாளர்களுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கூட்ட அரங்குகளில் அனைத்து வகையான கலாசார நிகழ்வுகளையும் நடத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
தனித்து இயங்கும் மதுக்கூடங்கள் உட்பட அனைத்து வகையான மதுக்கூடங்களும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அரசு பயிற்சி நிலையங்கள் 100 சதவீத பயிற்சி பெறுவோருடன் இயங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தேவையான எண்ணிக்கையிலான பணியாளர்கள் மற்றும் கலைஞர்களுடன் சினிமா உள்ளிட்ட அனைத்து வகையான படப்பிடிப்புகளும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நடைபெற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
படிப்பிடிப்பில் பங்குபெறும் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவை தவிர்த்து பிற மாநிலங்களுக்கிடையே சாதாரண மற்றும் குளிர்சாதன பேருந்துகளை, நூறு சதவிகிதம் இருக்கைகளில் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள் உரிய கட்டுப்பாடுகளுடன் தொடர்ந்து அனுமதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவிழாக்கள் மற்றும் அரசியல் நிகழ்வுகளுக்கு நடைமுறையிலுள்ள தடை தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.