நிறுவப்படும் ரேடார்களால் வானிலை ஆய்வில் இனி தமிழ்நாடு தான் முதல்

301
Advertisement

தமிழகத்தில் பருவமழை ஜூலை முதல் தொடங்கி டிசம்பர் வரை பெய்கிறது. வருடந்தோறும் தமிழகத்தில் பருவநிலை மாற்றத்தால் மாறிவரும் தட்ப வெப்ப சூழலுக்கு ஏற்றவகையில் கடந்த 10 வருடங்களாக தமிழகத்தில் மழை அளவு, பெய்யும் கால நேரம், இடங்கள் போன்றவை மாறுபடுகிறது.இந்நிலையில் கடந்த வருடம் வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் எதிர்பார்த்த அளவைவிட மிக அதிகமாக பெய்தது.அதே போல கடந்த வருடம் டிசம்பர் 30ஆம் தேதியும் சென்னையில் திடீரென பெய்த மழையால் ஒரே நாளில் நகரமே தத்தளித்தது.

சுமார் மூன்று மணி நேரத்தில் பல இடங்களில் 8 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதற்கு காரணம் மேகவெடிப்பு இல்லை எனக் கூறப்பட்டாலும், இதுகுறித்து முன்கூட்டியே கணிப்பதற்கான துல்லிய ரேடார் வசதி இல்லை என்கிற குற்றச்சாட்டு பல தரப்புகளில் இருந்து வைக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழக பட்ஜெட் 2022 இன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் நிதியமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் வானிலை மேம்பாட்டுக்கு 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்த அறிவிப்பை வெளியிட்டார். 2 ரேடார்கள், 100 தானியங்கி வானிலை மையங்கள், 400 மழைமானிகள் அமைக்கப்படும் என அறிவித்தார். இந்த அறிவிப்பிற்கு பல்வேறு தரப்பில் இருந்து வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தியாவிலேயே வானிலையை கண்காணிக்கும் ரேடார் அமைக்க நிதி ஒதுக்கியுள்ள மாநிலம் தமிழகம்தான் என்கின்ற பெருமையை பெற்றுள்ளது.