10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் ‘ரோஸ்கர் மேளா’ திட்டத்தின் ஒரு பகுதியாக இன்று 70 ஆயிரம் இளைஞர்களுக்கு காணொளி வாயிலாக நியமன ஆணைகளை வழங்கினார் பிரதமர் நரேந்திர மோடி.
பல்வேறு அரசுத்துறைகள் மற்றும் அமைச்சகங்களில் வரும் 2025ம் ஆண்டுக்குள் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. இந்நிலையில், இதனை ஓர் இயக்கம் போல கொண்டு செல்ல வேண்டும் என பிரதமர் மோடி கடந்த ஜூன் மாதம் வலியுறுத்தியிருந்தார்.
இதையடுத்து இது ‘ரோஸ்கர் மேளா’ திட்டமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தின்படி அவ்வப்போது இளைஞர்களுக்கு பிரதமர் மோடி பணி நியமன ஆணைகளை வழங்கி வருகிறார். தற்போது இதன் தொடர்ச்சியாக இன்று சுமார் 70 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கியுள்ளார். காணொளி வாயிலாக இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி, பணி ஆணைகளை வழங்கியுள்ளார்.
ஆணையைப் பெற்ற இளைஞர்களிடம் கலந்துரையாடிய அவர், “சில அரசியல் கட்சிகள் அரசு வேலைக்கான விலையை நிர்ணயித்துள்ளன. ஆனால் பாஜக அப்படியான கட்சி அல்ல.
இந்த இளைஞர்கள் ஆன்லைன் மூலம் கர்மயோகி பிரம்ப் மூலம் பயிற்சிகளை பெறுவார்கள். நாடு முழுவதும் நிதிச் சேவைத் துறை, அஞ்சல், பள்ளிக் கல்வி, உயர்கல்வி, பாதுகாப்பு அமைச்சகம், வருவாய்த் துறை, சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், அணுசக்தி, ரயில்வே அமைச்சகம், தணிக்கை மற்றும் கணக்குத் துறை, அணுசக்தித் துறை மற்றும் உள்துறை அமைச்சகம் போன்ற துறைகளில் பணியாற்றும் இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
முன்னதாக கடந்த 16ம் தேதி இதே போல சுமார் 71 ஆயிரம் இளைஞர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.