Wednesday, December 11, 2024

GST காலத்திலும் 5 ரூபாய்க்கு ஒரு வேளை சோறு

ஆழ்வார்ப்பேட்டை சி.பி ராமசாமி சாலையின் கடைசி எல்லையில் உள்ள லக்ஷ்மி டீ ஸ்டாலில் போலீஸ்காரர்கள், பாதுகாப்புப் பணியாளர்கள், ஆட்டோ ரிக்ஷா ஓட்டுனர்கள் என பலர் சூடான தேநீர் குடித்து மசால் வடை போன்ற பண்டங்களை சாப்பிட்டுக்கொண்டிருந்தனர்.

திடீரென்று மதியம் பன்னிரெண்டரை மணியளவில் டீக்கடை பரபரப்பாக செயல்பட தொடங்குகிறது.

கடைக்கு வரும் அனைவரும் 5 செலுத்தி, சூடான சாம்பார் சாதம், தயிர் சாதம் ஊறுகாயுடன் வாங்கி செல்கின்றனர். பலர் இங்கு தான் தங்களின் முதல் வேளை உணவை வாங்க வருகிறார்கள்.

1996 இல் இந்த டீக்கடையை ஆரம்பிதிருக்கிறார், தேநீர் கடை மற்றும் துரித உணவு கடையுடன் சேர்த்து 5 ரூபாய் உணவுக்கடையையும் ஏழைகளுக்காக நடத்துகிறார் 62 வயதான எம்.கணேசன்.

“ஒரு முதியவர் ஏழைகளுக்கு நியாயமான விலையில் உணவு வழங்குவதை பார்த்தேன். எனக்கு அவரை யாரென்று தெரியாது. ஆனால் அவரின் நற்செயல் என்னை வெகுவாக கவர்ந்தது.

நான் அப்போதே நியாயமான விலையில் உணவு விற்க ஆரம்பித்தேன், கிட்டத்தட்ட 25 வருடங்களாக, உணவுப் பார்சல்களை ₹5 க்கு விற்று வருகிறேன், “என்கிறார் மலிவு விலை உணவகத்தை நடத்தி வரும் கணேசன்.

ஒரு நாள் எலுமிச்சை சாதம், ஒரு நாள் தக்காளி சாதம், ஒரு நாள் சாம்பார் சாதம், ஒரு நாள் தயிர் சாதம் அல்லது புளியோதரை என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான உணவு வழங்குகிறார்.

அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளபோதிலும், தொடர்ந்து அதே விலையில் தான் உணவு விற்கிறார் .

“பசியுள்ள எவரும் இங்கு ஒருவேளை உணவை வாங்க முடியும் என்பது தான் என் சிந்தனை. தயிர் சாதத்தில் திராட்சையை சேர்ப்பது மற்றும் நல்ல தரமான மூலப்பொருட்களை வாங்கி உணவு சமைப்பது போன்ற சிறிய விஷயங்களை தான் நான் செய்கிறேன்.

விலை உயர்வு காரணமாக வழங்கும் சாப்பாட்டின் அளவை கொஞ்சம் குறைக்க வேண்டியிருந்தது, ஆனால் தரத்தில் ஒருபோதும் சமரசம் செய்தது இல்லை. 25 வருடங்களுக்குப் பிறகும், பலர் எங்கள் உணவை வாங்க வருவதற்கு இதுதான் காரணம், ”என்று கூறுகிறார்.

“முன்பு கடையிலேயே உட்கார்ந்து சாப்பிடலாம். இப்போதெல்லாம், கூட்டத்தைத் தவிர்க்க, பார்சல்களைக் மட்டும் கொடுக்கத் தொடங்கியுள்ளோம்.

ஒரு மணி நேரத்திற்குள், கிட்டத்தட்ட 800 பார்சல் உணவு கொடுக்கிறோம். ஒவ்வொரு நாளின் முடிவிலும்,பலரின் பசிக்கு சேவை செய்ய முடிந்ததாக எண்ணி திருப்தியுடன் வீடு திரும்புகிறேன்,” என்று உணர்ச்சி பொங்க கூறுகிறார் உணவக உரிமையாளர் கணேசன் .

சேவை வளர வாழ்த்துவோம் இவரை.

Latest news
Related news

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!