வடைக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
உணவுப் பொருள், தின்பண்டம் என இருவகையிலும் இடம்பெறுவது வடை. காலை சிற்றுண்டி இட்லி, தோசை, பொங்கல், பூரி என எதுவாக இருந்தாலும் உளுந்து வடையோ பருப்பு வடையோ கண்டிப்பாக இடம் பெறும். இல்லையெனில், சாப்பிட்ட திருப்தி ஏற்படாது. கிராமமாக இருந்தாலும், நகரமாக இருந்தாலும் இந்த வழக்கம் உண்டு.
சிற்றுண்டி தவிர, தேநீர் வேளையின்போதும் வடையைத் தின்றுகொண்டே தேநீர் அருந்துவது பலரின் வழக்கம். தேநீர் இன்றி, வெறும் வடையை மட்டுமே பிரியமாகத் தின்போரும் ஏராளம். இலையில் வடையை வைத்து தேங்காய்ச் சட்னி, சாம்பார் ஊற்றி உணவுபோல் உண்போரும் அதிகம் உண்டு.
அதனால் உளுந்து வடையோ, பருப்பு வடையோ எந்த ஊரில் கடை விரித்தாலும் கொள்வார் உண்டு. வடைப் பிரியர்களின் இந்த ஆசைக்குத் தற்காலிமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தத் தடை பொதுவானது அல்ல.
மத்திய அரசின் சுகாதாரத் துறையின் கேன்டீனில்தான் இந்த அதிரடி உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வேகமாகப் பரவி வருகின்றன. தற்போதைய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மான்டவியா ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வாழ்வதற்காக இந்த முறையை உருவாக்கியுள்ளார்.
அதனால், வடை, சமோசா, பக்கோடா ஆகியவற்றுக்குப் பதிலாகப் பருப்பு தால், பட்டாணி, சிறுதானிய உணவுகள் கேன்டீனில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. வறுத்த, பொரித்த உணவுகள், தின்பண்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாவம் மக்கள் பிரதிநிதிகள்…..அமைச்சகப் பணியாளர்கள்… என்கின்றனர் நெட்டிசன்கள்..
நல்ல வேளை…. பொது இடங்களில் தடைவிதிக்கவில்லை என்று நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றனர் பொது ஜனங்கள்…