பிரதமரிடம் முதல்வர் வைத்த கோரிக்கைகள்..

295

தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் ஒரே மேடையில் அரசு விழாவில் பங்கேற்றனர்.

அப்போது பேசிய முதலமைச்சர், நாட்டின் வளர்ச்சியில் தமிழ்நாடு மக்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது என்று கூறினார்.

மற்ற மாநிலங்களின் வளர்ச்சியை விட தமிழ்நாட்டின் வளர்ச்சி தனித்துவமிக்கது என்று தெரிவித்த அவர், தமிழ்நாட்டின் வளர்ச்சி என்பது பொருளாதாரத்தை மட்டுமே சார்ந்தது அல்ல என்றும், சமுக நீதி, சமத்துவம், பெண்கள் முன்னேற்றம் ஆகிய அம்சங்களை உள்ளடக்கியது தான் தமிழகத்தின் வளர்ச்சி என்று பெருமிதம் தெரிவித்தார்.

மத்திய அரசின் வரி வருவாயில் தமிழ்நாட்டின் பங்கு 6 சதவீதம் என்று குறிப்பிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு ஏற்ப மத்திய அரசின் பங்களிப்பை அதிகரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

சாலை கட்டமைப்புகளை மேம்படுத்த மத்திய அரசுடன் இணைந்து செயல்பட தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது என்று தெரிவித்துள்ள முதலமைச்சர், சாலைத் திட்டங்களுக்கு மத்திய அரசின் நிதி பங்கு காலப்போக்கில் குறைக்கப்படுவது மாநில நிதிச்சுமையை அதிகரிப்பதாக கூறினார்.

கச்சத்தீவினை மீட்டெடுத்து பாரம்பரிய மீன்பிடி மக்களின் உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்று கேட்டுக் கொண்ட முதலமைச்சர், 14 ஆயிரத்து 6 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகையை விரைந்து வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

ஜி.எஸ்.டி. இழப்பீடு தொகையை அடுத்த 2 ஆண்டுகளுக்கு நீட்டித்து தர வேண்டும் என்று முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் மொழியை வழக்காடு மொழியாக கொண்டு வர வேண்டும் என்றும், தமிழ் மொழியை இந்தியாவின் அலுவல் மொழியாக அறிவிக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.