ஒரு நாள் பயணமாக சென்னை வந்த பிரதமர் மோடி, 31 ஆயிரத்து 400 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார்.
2 ஆயிரத்து 900 கோடி மதிப்பிலான 5 திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். அந்தத் திட்டங்களை விரிவாகப் பார்க்கலாம்.
சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில், நடைபெற்ற அரசு விழாவில், பிரதமர் மோடி, 2 ஆயிரத்து 980 கோடி ரூபாய் மதிப்பிலான 5 திட்டங்களை நாட்டிற்கு அர்ப்பணித்தார்.
அதன்படி, 598 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தாம்பரம் – செங்கல்பட்டு இடையேயான 30 கி.மீ தொலைவுக்கு 3-வது ரயில் வழித்தடத்தை நாட்டிற்கு அர்ப்பணித்தார்.
506 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 75 கி.மீ தொலைவிற்கு மதுரை – தேனி இடையே அகல ரயில் பாதையையும் அவர் அர்ப்பணித்தார்.
850 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 115 கி.மீ தொலைவிலான எண்ணூர் – செங்கல்பட்டு இடையே குழாய் மூலம் எரிவாயு கொண்டு செல்லும் திட்டத்தையும், 910 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 271 கி.மீ தொலைவிலான திருவள்ளூர்-பெங்களூரு இடையேயான இயற்கை எரிவாயு குழாய் கொண்டு செல்லும் திட்டத்தையும் பிரதமர் மோடி நாட்டிற்கு அர்ப்பணித்தார்.
இதேபோல், பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதி திட்டத்தின் கீழ், சென்னை பெரும்பாக்கத்தில் 116 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆயிரத்து 152 வீடுகளையும் அவர் திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, 28 ஆயிரத்து 500 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்படவுள்ள 6 திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
14 ஆயிரத்து 870 கோடி ரூபாய் செலவில், 262 கி.மீ தூர பெங்களூரு – சென்னை விரைவுச்சாலை திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
சென்னை துறைமுகம் – மதுரவாயல் இடையே 21 கி.மீ. தூரத்திற்கு ஈரடுக்கு, நான்குவழி உயர்மட்டச்சாலை 5 ஆயிரத்து 850 கோடி ரூபாய் செலவில் அமைக்கும் திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
ஆயிரத்து 803 கோடி ரூபாய் மதிப்பீட்டில் எழும்பூர், ராமேஸ்வரம், மதுரை, காட்பாடி, குமரி ஆகிய 5 ரயில் நிலையங்களை நவீனமயமாக்கும் திட்டத்திற்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.
3 ஆயிரத்து 870 கோடி ரூபாய் மதிப்பீட்டில், நெரலூரு – தருமபுரி இடையே 94 கி.மீ தொலைவிற்கு 4 வழிச்சாலை திட்டத்திற்கு அடிக்கல் நாட்டத்தப்பட்டது.
720 கோடி ரூபாய் மதிப்பீட்டில், மீன்சுருட்டி – சிதம்பரம் இடையே 31 கி.மீ. தொலைவிற்கு இருவழிச்சாலை அமைக்கும் திட்டத்திற்கும் அடிக்கல் நாட்டினார்.
ஆயிரத்து 400 கோடி ரூபாய் மதிப்பில் சென்னையில் உருவாக்கப்படவுள்ள போக்குவரத்துப் பூங்காவுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார்.