நீட் தேர்வில் ஆள்மாறாட்டம், பல லட்சம் கைமாறல்

256
Advertisement

மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வில், மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த தனியார் பயிற்சி மையம், பல கோடி ரூபாய் பெற்றுக்கொண்டு ஆள்மாறாட்டம் உள்ளிட்ட, பல்வேறு முறைகேடுளில் ஈடுபட்டது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் கடந்த 12-ம் தேதி, மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு, 13 மொழிகளில் நடத்தப்பட்டது. அப்போது, நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தது, முகக் கவசத்தில் மைக் பொருத்தி, விடைகளைக் கேட்டு எழுதியது என்பன உள்ளிட்ட முறைகேடுகள், ராஜஸ்தான், பீகார் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் அரங்கேறியது கடந்த வாரம் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள், டெல்லி மற்றும் ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில், ஆள்மாறாட்டம் உள்ளிட்ட மிகப்பெரிய மோசடி செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

மராட்டிய மாநிலம் நாக்பூரில் செயல்பட்டு வரும் R.K.Education Carrier Guidence என்ற நீட் பயிற்சி மையம், இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதனை கண்டுபிடித்துள்ள டெல்லி சி.பி.ஐ. அதிகாரிகள், அதற்கு மூளையாக செயல்பட்ட நாக்பூர் தனியார் பயிற்சி நிறுவன உரிமையாளர் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது.

நீட் தேர்வில் முறைகேடாக வெற்றி பெற டெல்லி, ராஞ்சியைச் சேர்ந்த மாணவர்களின் பெற்றோரிடம் தலா 50 லட்சம் ரூபாய் பணம் பெற்றதை, சி.பி.ஐ. உறுதி செய்துள்ளது.

தேர்வர்களின் விவரங்கள், ஓ.எம்.ஆர்.தாள்களில் போலியாக திருத்தம் செய்து மோசடி செய்ததும் தெரியவந்துள்ளது. ஹால் டிக்கெட்டில் புகைப்படங்களை மார்பிங் செய்து, அதன் மூலம் ஆள்மாறட்டம் செய்து நீட் தேர்வு எழுதியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, டெல்லியில் 5 மாணவர்களும், ராஞ்சியில் ஒரு மாணவரும் சி.பி.ஐ. வளையத்தில் கொண்டுவரப்பட்டுள்ளனர். இவர்களுக்காக தேர்வு எழுதிய போலி தேர்வர்களும் சி.பி.ஐ. வளையத்திற்குள் வந்துள்ளனர்.

போலி தேர்வர்களை கண்டுபிடித்து பணம் கொடுத்த திவாகர், ராம்பிரகாஷ் சிங், முன்னா ஆகியோர் சிக்கியுள்ளனர். இவர்கள் மீதும், அடையாளம் தெரிந்த மேலும் சிலர் மீதும் 9 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன.