தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் இருக்கும் மருத்துவ படிப்பு இடங்களுக்கு இன்று முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் 6 ஆயிரத்து 958 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன.
அதேபோல் அரசு மற்றும் சுயநிதி பல் மருத்துவ படிப்புக்கு (பி.டி.எஸ்.) ஆயிரத்து 925 இடங்கள் உள்ளன.
அந்த வகையில் மொத்தம் 8 ஆயிரத்து 883 மருத்துவ படிப்பு இடங்களுக்கான அறிவிப்பாணை இன்று காலை வெளியானது. அதைத் தொடர்ந்து ஆன்லைன் விண்ணப்பத்தில் மாணவர்கள் பதிவு செய்துகொள்ளலாம்.
முதல்-அமைச்சரின் பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக தமிழகத்தில் உள்ள 11 புதிய மருத்துவ கல்லூரிகளில் ஆயிரத்து 450 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்த கல்லூரிகள் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் போது திறக்கப்பட்டாக வேண்டும்.
அந்தவகையில் ஜனவரி 12-ந் தேதி பிரதமரும், தமிழக முதல்-அமைச்சரும் அந்த 11 புதிய மருத்துவ கல்லூரிகளை திறந்துவைக்க இருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.