லாலு பிரசாத் யாதவின் உடல்நிலையில் முன்னேற்றம்

195

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தந்தையின் புகைப்படத்தை மகள் மிசா பாரதி வெளியிட்டுள்ளார்.

புதுடெல்லி, மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட பீகார் முன்னாள் முதல்-மந்திரியும், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவருமான லாலு பிரசாத் யாதவ் உடல்நலக்குறைவு காரணமாக ஜாமினில் உள்ளார்.

இதனிடையே, பாட்னாவில் உள்ள வீட்டில் கடந்த சனிக்கிழமை இரவு மாடிப்படியில் இருந்து லாலு பிரசாத் தவறி விழுந்தார். இதில், லாலுவின் கால் மற்றும் தோள்பட்டை பகுதியில் முறிவு, காயம் ஏற்பட்டது, இதனை தொடர்ந்து பாட்னாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் லாலு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. பின்னர் மேல்சிகிச்சைக்காக கடந்த புதன்கிழமை அவர் டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள லாலுவுக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவரின் மூத்த மகளும், ராஜ்யசபா எம்பியுமான மிசா பாரதி இன்று தெரிவித்து உள்ளார்.

மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அவரின் புகைப்படத்தை மிசா பாரதி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தந்தையின் உடல்நிலை குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “உங்களின் பிரார்த்தனையாலும், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நல்ல மருத்துவ சிகிச்சையாலும், தந்தையின் உடல்நிலை மிகவும் முன்னேற்றம் கண்டு வருகிறது. இப்போது அவரால் படுக்கையில் இருந்து எழுந்து உட்கார முடிகிறது மற்றும் ஆதரவுடன் நிற்க முடியும். எந்த பிரச்சனையையும் எதிர்த்து போராடும் கலை லாலுவை விட வேறு யாருக்கும் தெரியாது. வதந்திகளுக்கு கவனம் செலுத்த வேண்டாம்” என தெரிவித்துள்ளார்.